AppamAppam - Tamil

Dec 27 – வேத வசனத்தினாலே!

“அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும்” (1 தீமோ. 4:5).

உங்களுடைய கரங்களில் இருக்கிற வேதாகமம் உங்களைப் பரிசுத்த பாதையிலே வழி நடத்துவதால் பரிசுத்த வேதாகமம் என்று அழைக்கப்படுகிறது. வேத வசனங்களால் நீங்கள் பரிசுத்தமாக்கப்படுகிறீர்கள். தேவனுடைய வசனம் பாவியை பரிசுத்தவானாய் மாற்றுகிறது. வேதாகமத்திற்கு “சத்திய வேதாகமம்” என்று இன்னொரு பெயருமுண்டு. வேதம் சொல்லுகிறது, “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்” (யோவா. 17:17).

வேத வசனங்களில் பரிசுத்தத்தின் இரகசியம் அடங்கியிருக்கிறது. அந்த வசனத்திற்குள் ஆவியும் ஜீவனும் இருக்கின்றன. இதனுள் நீங்கள் அறியாத பரலோகத்தின் பரிசுத்தமும், ஜீவனும், ஆவியும் இணைந்திருக்கின்றன. ஆகவேதான் அவருடைய வார்த்தை உங்களைக் கழுவுகிறது, உங்களை அனல் மூட்டி எழுப்புகிறது, பரிசுத்த பாதையிலே நடத்துகிறது. பரிசுத்தமுள்ள தேவன் தம்முடைய ஜனங்கள் பரிசுத்தமாய் வாழ வேண்டுமென்பதற்காக அருளிச் செய்த பரிசுத்தமான சட்டதிட்டங்கள்தான் இந்த வேத வசனங்களாகும்.

பழைய ஏற்பாட்டிலே சீனா மலையில் நியாயப்பிரமாணத்தை கர்த்தர் மோசேக்குக் கொடுத்தபோது, அங்கே பெரிய இடிமுழக்கங்களும், மின்னல்களும் உண்டாயின. சீனா மலையே அசைந்தது. அதைப் பார்த்து இஸ்ரவேல் ஜனங்கள் நடுநடுங்கினார்கள். ஆம், நியாயப்பிரமாண புத்தகம் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுக்கப்பட்டபோது அந்த நியாயப்பிரமாணம் இஸ்ரவேல் ஜனங்களை பரிசுத்த பாதையிலே வழி நடத்துகிறதாயிருந்தது.

பிரமாணத்தைக் கொடுத்தவர், தன் பிள்ளைகளுக்கு கட்டுப்பாட்டை வைத்திருக்கிறார். இப்படித்தான் வாழவேண்டுமென்று வழி முறைகளைக் கொடுத்து, பரிசுத்த பாதையிலே நடக்கச் செய்கிறார். அதுதான் உங்களை நியாயந்தீர்க்கும் சட்ட புத்தகமாகும்.

இந்த பரிசுத்த வேதாகமம் உங்கள் உள்ளத்தில் இடம் பெற்றிருக்குமென்றால், இந்த வசனங்களின்படி உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுவீர்களென்றால், உங்கள் வாழ்க்கை ஒருபோதும் வழிவிலகிப் போகாது. நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள் அல்லவா? இரவும் பகலும் வேதத்தின்மேல் தியானமாய் இருக்கிற மனுஷன் பாக்கியவான் அல்லவா? அந்த பாக்கியமே உங்களை பரிசுத்தவானாய் நிலைநிறுத்துகிறது.

உலக படிப்பிற்கும், வேத படிப்பிற்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்! உலக படிப்பு ஒருவேளை ஒரு மனுஷனுக்கு உயர்வையும் உலக ஞானத்தையும் கொடுக்கலாம். ஆனால் அவை ஒருபோதும் ஆத்துமாவுக்கு பரிசுத்தத்தைக் கொடுப்பதில்லை. வேத படிப்பானது ஆத்துமாவைப் பரிசுத்தமாக்கி மறுரூபமாக்கிக் கொண்டே செல்லும். தேவபிள்ளைகளே, வேதத்தை வாசியுங்கள், நேசியுங்கள், தியானியுங்கள்.

நினைவிற்கு:- “நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்” (யோவா. 15:3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.