AppamAppam - Tamil

Dec 26 – வெளிச்சம் உதித்தது!

“அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும்…” (லூக்.1:78,79).

கிறிஸ்மஸ் தினம் முடிந்தாலும் கிறிஸ்மஸின் நோக்கம் முடிவடைந்து விடவில்லை. அது கர்த்தருடைய இரண்டாம் வருகை வரையிலும் தொடர்ந்து சென்றுகொண்டேயிருக்கும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஏன் இந்த உலகத்தில் பிறந்தார்? அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தர வேண்டும் என்பதற்காகவே இந்த உலகத்தில் பிறந்தார்.

 கர்த்தர் இந்த பூமிக்கு வந்த நோக்கத்தை முழுவதுமாய் உங்களால் புரிந்துகொள்ள முடியாமல் போனாலும் வேத வசனங்களின் மூலமாய் பல காரியங்களை நீங்கள் அறிந்துகொள்ளுகிறீர்கள். வேதம் சொல்லுகிறது, “மனுஷகுமாரன் கெட்டுப் போனதை இரட்சிக்க வந்தார்” (மத். 18:11). “இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்” (லூக். 19:10). “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” (1 தீமோ. 1:15).

சாலொமோன் ராஜாவைக் குறித்து பழங்காலத்து கதை ஒன்று உண்டு. அவரும் சேபா ராஜஸ்திரீயும் குதிரையின் மேல் சென்றபோது வழியிலே சாரைசாரையாக எறும்புகள் செல்லுகிறதை கண்டதும் அவர் இறங்கி சேபா ராஜஸ்திரீயிடம், ‘எல்லோரும்தான் எங்களை மிதிக்கிறார்கள். சாலொமோன் ராஜாவுமாய் எங்களை மிதிக்க வேண்டும்?’ என்று இவை கேட்கின்றன.

ஆகவே நாம் வேறு பாதையில் சென்றுவிடுவோம் என்று விலகிச் சென்றாராம். சாலொமோன் ராஜாவால் அவ்வளவுதான் புரிந்துகொள்ள முடிந்தது. அதே நேரம் அவர் ஒரு எறும்பு போல மாறி, எறும்புகளுடைய மொழி சுபாவங்களையும் அறிந்து எறும்பு மொழியிலே பேசியிருப்பாரானால் எறும்புகளைப் பற்றிய எத்தனையோ இரகசியங்களை அறிந்திருக்கக்கூடும்.

தேவாதி தேவனும், இராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தருமான சிருஷ்டிப்பின் தேவன், பரலோக மேன்மையைத் துறந்து நம்மைப் போல மாம்சமும் இரத்தமும் உடையவராய் நம்முடைய இரட்சகராய் மாறினார். அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவேண்டுமென்பதும் நம்முடைய கால்களை சமாதானத்தின் பாதையில் நடத்த வேண்டுமென்பதுமே அவரது பிறப்பின் நோக்கம் (லூக். 1:78,79).

கிறிஸ்து இந்த பூமியிலே பாலகனாய்ப் பிறந்ததன் நோக்கங்களை நீங்கள் தெரிந்துகொண்டால் அது உங்களுடைய வாழ்க்கையை பிரகாசமடையச் செய்யும். தேவனை நன்றியுடன் துதிக்கச் செய்யும். உங்கள் வாழ்க்கையை ஒளி பெறச்செய்தது மட்டுமல்ல, உங்களுக்கு அவர் சமாதான காரணருமானார்.

“அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்” (எபே. 2:14,16). தேவபிள்ளைகளே, இந்த வெளிப்பாட்டின் வெளிச்சம் உங்களுடைய வாழ்க்கையை பிரகாசிக்கச் செய்வதாக!

நினைவிற்கு:- “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (யோவா. 14:27).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.