AppamAppam - Tamil

Dec 25 – கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!

“யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?” (மத். 2:2).

என் அருமை வாசகர்களாகிய உங்களுக்கு எனது அன்பின் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை உள்ளத்தின் ஆழத்திலிருந்து தெரிவித்துக் கொள்ளுகிறேன். உங்கள் குடும்பத்தோடும், பிள்ளைகளோடும் மகிழ்ந்து கொண்டாடுகிற இந்த நன்நாளிலே கர்த்தர் எல்லாவித ஆசீர்வாதங்களையும் உங்கள்மீது பொழியச் செய்வாராக.

அன்றைக்கு சாஸ்திரிகள் இயேசுவைத் தேடி வந்தபோது, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே என்று தேடினார்கள். முழு உலகத்திற்கும், சர்வத்திற்கும் ராஜாதி ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே என்றுதான் அவர்கள் கேட்டிருந்திருக்க வேண்டும்.

 நம் அன்பு இரட்சகர் மாட்டுக் கொட்டகையிலே பிறந்திருந்தாலும்கூட, அவர் பிறப்பு ராஜ பிறப்புதான். அந்த பிறப்பின் மேன்மையை இவ்வுலகத்திற்கு அறிவிக்க பிதாவாகிய தேவன் தமது விசேஷ நட்சத்திரத்தை அனுப்பினார். சாஸ்திரிகள் அவரைப் பணிந்து கொண்டபோது, ஒரு ராஜாவுக்கு காணிக்கையை செலுத்துவதைப்போல பொன்னையும், வெள்ளைப்போளத்தையும், தூபவர்க்கத்தையும் கொடுத்தார்கள். தேவதூதர்கள் அவரைப் பணிந்து கொண்டார்கள். கள்ளம் கபடமற்ற மேய்ப்பர்கள் அவரைப் பணிந்து தொழுதுகொண்டார்கள். சாஸ்திரிகள் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினார்கள். இந்த நன்நாளிலே நீங்களும் உங்கள் ராஜாவைப் பணிந்து கொள்ளுவீர்களாக.

முதலாவது, அவர் பரிசுத்தவான்களின் ராஜா! வேதம் சொல்லுகிறது, “பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்” (வெளி. 15:3). பெத்லகேம் பாலகன் பரிசுத்தர் மட்டுமல்ல, ஜனங்களுக்குப் பரிசுத்தத்தைத் தர வந்தவரும்கூட!

    இரண்டாவது, அவர் மகிமையின் ராஜா! வேதம் சொல்லுகிறது, “வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள், மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்” (சங். 24:9). பெத்லகேமின் வாசல்களே, மாட்டுக் கொட்டகையின் கதவுகளே, உங்களிடத்தில் வந்து பிறந்திருக்கிறவர் மகிமையின் ராஜா, வானாதி வானங்களும் கொள்ளக்கூடாத மகிமை நிறைந்தவர்.

மூன்றாவது, அவர் சாந்த குணமுள்ள ராஜா! வேதம் சொல்லுகிறது “இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள்” (மத். 21:4).

நான்காவது, அவர் நீதியின் ராஜா. “இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்” என்று ஏசாயா தீர்க்கதரிசி விளம்பினார் (ஏசா. 32:1). நீதியையும் நியாயத்தையும் எழுப்பிக் கட்டும் நீதியுள்ள ராஜாவாகிய இயேசு நீதியாக அரசாளுவார். அவர் என் ராஜா (சங். 5:2). பூர்வகால ராஜா (சங். 74:2). நீதியின் ராஜா, சாலேமின் ராஜா, சமாதானத்தின் ராஜா (எபி. 7:2). நித்திய ராஜா (எரே. 10:10).

தேவபிள்ளைகளே, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் உங்களுக்குள் வாசம் பண்ணுகிறார். இம்மானுவேலராய் உங்களோடுகூட இருக்கிறார். அவரே ராஜாதி ராஜா!

நினைவிற்கு:- “தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்” (சங். 47:7).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.