AppamAppam - Tamil

Dec 23 – வெளிச்சமாய் இருக்கிறீர்கள்!

“நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” (மத். 5:14).

அமெரிக்காவில் ஸ்பிரிங்பீல்டு (Springfield) என்ற இடத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் வசித்த வீடு இருக்கிறது. தற்போது அந்த வீட்டை அரசாங்கம் எடுத்து கண்காட்சி இடமாக மாற்றி அமைத்திருக்கிறது. ஏராளமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அந்த வீடு பொது மக்களுடைய பார்வைக்காக கவர்ச்சிகரமாய் விளங்குகிறது.

 ஒரு தகப்பன் தன் சிறு குழந்தையை அழைத்துக்கொண்டு அந்த வீட்டுக்கு முன்பாக நடந்து சென்றான். அந்த வீட்டை கண்டதும் “அப்பா, ஆபிரகாம் லிங்கன் விளக்கை அணைத்துவிட மறந்து விட்டாரா? அவர் மரித்த பின்பும் அவருடைய விளக்கு பிரகாசமாய் எரிந்து கொண்டிருக்கிறதே” என்று அந்த குழந்தை சொன்னாள். “மரித்த பின்பும் அவரது விளக்குகள் பிரகாசிக்கின்றதே” என்று அந்த மகள் சொன்ன வார்த்தைகள் தகப்பனுடைய உள்ளத்தை தொட்டது.

ஆம், கிறிஸ்தவன் வாழும்போதும் சரி, மரணத்திலும் சரி, பிரகாசிக்கிறான். கர்த்தருடைய பிள்ளைகள் ஜீவனோடிருக்கும் போதும் கர்த்தருக்காக சாட்சியாக பிரகாசிக்கிறார்கள். மரித்த பின்பும் அவர்கள் தீபம் அணைந்து போவதில்லை.

 தேவபிள்ளைகளே, நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். “…ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப் போலப் பிரகாசிக்கிற நீங்கள்” (பிலி.2:14). அப்படிப்பட்ட நீங்கள் உங்களுடைய வெளிச்சத்தை காத்துக்கொள்ளுங்கள். இயேசு சொன்னார், “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” (மத். 5:16).

 ஒரு விளக்கு வெளிச்சம் கொடுக்க வேண்டுமென்றால் அந்த விளக்குக்கு எண்ணெய் தேவை. அந்த விளக்கினுடைய திரி அந்த எண்ணெக்குள் மூழ்கி இருக்கவேண்டியதும் அவசியம். அதுபோலவே ஒரு விசுவாசி மற்றவர்களுக்கு எரியும் விளக்காக இருக்க வேண்டுமென்றால் அவனுக்கு எண்ணெயாகிய பரிசுத்த ஆவியானவரின் நிரப்புதல் தேவை. மட்டுமல்ல, அவனுடைய உள்ளமாகிய திரி ஆவியானவருக்குள் மூழ்கியும் ஆவியானவரோடு இடைவிடாத தொடர்பு கொண்டிருக்கவும் வேண்டும். அப்போது அவனுடைய வாழ்க்கை பிரகாசிக்கும்.

தாவீது ஜெபிக்கும் போது “கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள் மேல் பிரகாசிக்கப் பண்ணும்” (சங். 4:6). “நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன் மேல் பிரகாசிக்கப்பண்ணி, உமது கிருபையினாலே என்னை இரட்சியும்” (சங். 31:16) என்றெல்லாம் ஜெபிக்கிறதைப் பார்க்கிறோம்.

சந்திரனைப் பாருங்கள். சந்திரனுக்கு என்று ஒரு ஒளி இல்லாவிட்டாலும்கூட சூரியனைப் பார்த்தபடி அதையே சுற்றி வருவதால், சூரியனுடைய ஒளியைப் பெற்று பிரகாசிக்க ஆரம்பித்துவிடுகிறது.

தேவபிள்ளைகளே, அதுபோல நீங்களும் நீதியின் சூரியனாகிய கர்த்தரோடு ஜெபத்திலும் உபவாசத்திலும் ஆழமான ஐக்கியம் கொள்ளும்போது உங்களுடைய வாழ்க்கையும் பிரகாசிக்கும்.

நினைவிற்கு:- “அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை” (சங். 34:5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.