AppamAppam - Tamil

Dec 22 – வெட்கப்பட்டு போவதில்லை!

“என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை” (யோவேல் 2:26).

  இரண்டாம் உலகப்போர் கடுமையாக நடந்துக்கொண்டிருந்தபோது, சிறு பிள்ளைகளை லண்டன் பட்டணத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும்படி அரசாங்கம் கட்டளையிட்டது. அதன்படி பிள்ளைகளை விசேஷித்த வண்டியிலே ஏற்றிச் சென்றார்கள். பெற்றோருக்கு அது வேதனையாயிருந்தது. பிள்ளைகளைப் பிரிகிறோமே மீண்டும் அவர்களை சந்திப்போமா, யுத்தத்தின் நிலை என்னவாகுமோ என்று கண்கலங்கி நின்றார்கள்.

அதில் ஒரு சிறுமி தன் தாயின் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரைத் துடைத்து, “அம்மா நாங்கள் எங்கே போகிறோம் என்றும், எப்பொழுது திரும்புவோம் என்றும் தெரியாது. ஆனால், நம் ராஜா எல்லாவற்றையும் பொறுப்பெடுத்திருக்கிறார். நாம் வெட்கப்பட்டுப் போவதேயில்லை” என்றாள். அந்த சிறுமியினுடைய வார்த்தை அந்த தாயின் உள்ளத்தை மிகவும் ஆறுதல்படுத்தியது.

யோபு பக்தனுடைய வாழ்க்கையை வாசித்துப் பாருங்கள். எத்தனை வேதனைகள், எத்தனை பாடுகள்! அவருடைய சரீர வியாதி அவரை எங்கே இழுத்துச் செல்லுகிறது என்று அவருக்குத் தெரியாத நிலையிலும் அவர் சொன்னார்: “ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்த பின் நான் பொன்னாக விளங்குவேன்” (யோபு 23:10). கர்த்தர் யோபுவை வெட்கப்பட ஒப்புக்கொடுக்கவில்லை. சாத்தான் எவ்வளவோ சோதித்துப் பார்த்தான். கர்த்தர் யோபுவின் முன்னிலைமையைப் பார்க்கிலும், பின்னிலைமையை இரட்டிப்பாய் ஆசீர்வதித்தார்.

தேவபிள்ளைகளே, கர்த்தர் இன்று உங்களை அன்போடு பார்த்து “நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்தி வந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை” (யோவேல் 2:26) என்று சொல்லுகிறார். “என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை” என்று வாக்கும் அளிப்பதை பாருங்கள்.

கர்த்தர் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக உங்களுக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, உங்கள் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறார். நீங்கள் வெட்கப்பட்டுப் போவதேயில்லை. வேதம் சொல்லுகிறது, “எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப் போகாதிருந்தார்கள்” (சங். 22:4,5).

 ஆபிரகாமின் வாழ்க்கையை பாருங்கள்! அவர் கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து, தன்னுடைய சொந்த ஊரை விட்டும், இன ஜன பந்துக்களை விட்டும் புறப்பட்டு கர்த்தர் காண்பித்த தேசத்திற்கு சென்றார். அவர் வெட்கப்பட்டு போனாரா? ஒருபோதும் இல்லை. தேவபிள்ளைகளே, கர்த்தர் ஒருபோதும் உங்களை கைவிடமாட்டார். நீங்கள் வெட்கப்பட்டுப்போவதேயில்லை.

  நினைவிற்கு:- “இஸ்ரவேலோ, கர்த்தராலே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப் படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்” (ஏசா. 45:17).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.