AppamAppam - Tamil

Dec 21 – வீட்டாரோடுங்கூட!

“அவன் தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனு மாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்” (அப்.10:2).

கொர்நேலியு என்கிற நூற்றுக்கு அதிபதியைக் குறித்து அருமையான காரியங்களை வேதம் வர்ணித்து சொல்லுகிறது. அவன் ஒரு புறஜாதியான். ஆனாலும் அவனைக் குறித்து நான்கு விசேஷமான காரியங்களை அறியலாம். முதலாவது, அவன் தேவ பக்தியுள்ளவன். இரண்டாவது, தன் வீட்டாரனைவரோடும்கூட தேவனுக்குப் பயந்தவன். மூன்றாவது, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்தவன். நான்காவது, ஜெபம்பண்ணுவதிலே தாகமும் ஆர்வமும் மிக்கவன். தேவபிள்ளைகளே, இந்த குணாதிசயங்கள் உங்களில் காணப்படுகிறதா?

கொர்நேலியுவிலே இந்த சுபாவங்கள் காணப்பட்டதினால் கர்த்தர் தம்முடைய தூதனை அவனிடத்தில் அனுப்பி, “உன் ஜெபங்களும், உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டினது” என்று சொன்னார். இந்த கொர்நேலியுவின் வீட்டில்தான் முதல் முதலாக புறஜாதிகளின் மத்தியிலே பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்பட்டார். கர்த்தர் அவர்கள் மேல் வைத்த தன் அன்பை ஆச்சரியமான விதத்தில் வெளிப்படுத்தினார்.

உங்களுடைய வாழ்க்கையானது கர்த்தர் பேரிலான பக்தியுடனிருக்கும்போது, நிச்சயமாகவே கர்த்தர் உங்களை கனப்படுத்துவார். உங்களுடைய ஒவ்வொரு ஜெபத்துக்கும் ஆம் என்றும் ஆமென் என்றும் பதில் தருவார். வேதம் சொல்லுகிறது, “பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்” (சங்.4:3).

ஆபிரகாம் ‘தேவனுடைய சிநேகிதன்’ என்று அழைக்கப்பட்டார் (யாக்.2:23). நோவா தேவனோடு சஞ்சரித்தார் (ஆதி.6:9). ஏனோக்கு குடும்பஸ்தனாய் இருந்த போதிலும் ஏறக்குறைய முந்நூறு வருடங்கள் தேவனோடு நடந்தார் என்று வேதம் சொல்லுகிறது. காரணம் என்ன? அவர்களில் இருந்த தேவபக்திதான் கர்த்தரை அதிகமாய்த் தேட வேண்டுமென்ற உணர்வை கொண்டு வந்தது. அந்தப் பக்தியினால்தான் அவர்கள் ஜெபித்தார்கள். தேவன் பேரில் தாகம் கொண்டார்கள். அவருடைய பாதத்தருகே வாஞ்சையாய் அமர்ந்திருந்தார்கள். உங்கள் உள்ளத்தில் தேவ பக்தியிருந்தால் உண்மையாகவே கர்த்தரை நேசிப்பீர்கள். அதிகாலமே அவரைத் தேடுவீர்கள். வேதத்தை வாசித்து மகிழுவீர்கள்.

சிலர் வாலிப வயதை நன்றாய் அனுபவிக்க வேண்டும் என்றும் பக்தி, கோவில் என்று வீணடித்து விடக்கூடாது என்றும் எண்ணுகின்றனர். ஆனால் “உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” (பிர.12:1) என்று வேதம் சொல்லுகிறது. வாலிப வயதின் பக்தி, அவர்களை முதிர்வயதிலும் பரிசுத்தத்தோடு பாதுகாத்துக்கொள்ளும். நல்ல மனச்சாட்சியையும், சந்தோஷத்தையும் கொண்டு வரும்.

தேவபிள்ளைகளே, கர்த்தருக்காக நீங்கள் செலவழிக்கிற நேரம் வீணானது அல்ல. தேவபக்தி உங்களுக்கு மட்டுமல்ல, உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் பெரிய ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும்.

நினைவிற்கு:- “…பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்வான்; அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது” (சங். 32:6).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.