AppamAppam - Tamil

Dec 19 – விழிப்பாயிருங்கள்!

“திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்” (மத். 24:43).

“விழிப்பாயிருங்கள்” என்று வேதம் திரும்பத் திரும்ப ஆலோசனை சொல்லுகிறது. திருடன் என்று ஒருவன் இருக்கிறபடியினால் நீங்கள் விழிப்பாயிருக்க வேண்டும். யாரை விழுங்கலாமோ என்று சத்துரு வகைத்தேடி திரிவதினால் நீங்கள் விழிப்பாயிருக்கவேண்டியது அவசியம்.

ஒரு குடும்பத்தினர் சூரிய உதயத்தைக் காண விரும்பி அதிகாலையிலே கன்னியாகுமரியை நோக்கி காரில் விரைந்தார்கள். அயர்ந்திருந்த ஓட்டுநரின் இமைப் பொழுது தூக்கம் ஒரு பெரிய விபத்தை ஏற்படுத்த, குடும்பத்தினர் அனைவரும் அவ்விடத்திலேயே மரித்தனர். ஆகவேதான் உறங்காமல் “விழிப்பாயிருங்கள்” என்று வேதம் சொல்லுகிறது. உங்களுடைய பரிசுத்த வாழ்க்கையைக் காத்துக் கொள்ள விழிப்புள்ளவர்களாய் இருங்கள். உங்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் கறை திரைகளை ஏற்படுத்த சாத்தான் முயற்சி செய்துகொண்டே இருக்கிறான். ஒரு தடவை சாட்சியின் ஜீவியம் கெட்டுப்போனால் பிறகு அதை சீர்ப்படுத்துவது என்பது முடியாத காரியம். “உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” (1 பே.1:15).

ஒரு போதகர் மிகப்பெரிய ஆவிக்குரிய சபை ஒன்றை எழுப்பினார். அந்த சபை மிகவும் வளருகிறதாகவும், பேரும் புகழும் பெற்றதாகவும் விளங்கியது. ஆனால் அந்த போதகரோ தன் தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ளாமல் தவறான தொடர்பு வைத்ததினால் தன் பரிசுத்தத்தை இழந்து போனார்.

முடிவில் அவரை போதகராய் இருக்க விடாதபடி தள்ளிவிட்டார்கள். அத்தனை பெரிய ஆலயத்தை ஆரம்பித்து வளரச் செய்து விருத்தியடையும்படி பல ஆண்டுகள் பாடுபட்டவரால், அந்த ஆலயத்தில் பிரசங்கிக்க முடியாமல் போய்விட்டது. அவருடைய நிலைமை பரிதாபமாய் முடிந்தது. ஆவிக்குரிய ஜீவியத்தில் நீங்கள் விழிப்பாயிருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

வேதம் சொல்லுகிறது, “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள். ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான்” (1 பேதுரு 5:8).

ஜெபத்திலும் விழிப்பாயிருங்கள். ஒருநாளும் ஜெப வாழ்க்கையை அற்பமாய் எண்ணி விடாதிருங்கள். இயேசு சொன்னார், “ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்” (லூக்கா 21:36).

தேவபிள்ளைகளே, விழிப்புள்ள ஜீவியம்தான் வெற்றியுள்ள ஜீவியம். விழிப்பாயிருந்தால் ஒருபோதும் சாத்தான் உங்களை நெருங்க முடியாது. நீங்கள் விழிப்புள்ளவர்களாய் இருந்தால் மணவாளனுக்கு எதிர்கொண்டு போவதில் மகிழ்ச்சியுடையவர்களாய் இருப்பீர்கள்.

நினைவிற்கு:- “ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்” (1 தெச. 5:6).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.