AppamAppam - Tamil

Dec 17 – நீதியை நடப்பித்தார்கள்!

“விசுவாசத்தினாலே நீதியை நடப்பித்தார்கள்” (எபி. 11:33).

நீங்கள் நீதியை நடப்பிக்கும்படியாக அழைக்கப்பட்டவர்கள். உங்கள் கிரியைகள் நீதியை நடப்பிக்கிறவைகளாக இருக்க வேண்டும். விசுவாசமும், கிரியையும் ஒன்றோடொன்று இணைந்திருக்க வேண்டும். கிரியை இல்லாவிட்டால் விசுவாசத்தில் ஒரு பிரயோஜனமுமில்லை. ‘கிரியை இல்லாத விசுவாசம் செத்தது’ என்று வேதம் சொல்லுகிறது.

உதாரணமாக மின்சாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதை உபயோகிக்காமல் வைத்திருந்தால் யாருக்கும் எந்த பிரயோஜனமுமில்லை. ஆனால் அதை உபயோகத்துக்குக் கொண்டு வரும்போது மின்சாரத்திலே விளக்குகள் எரிகின்றன. மின் விசிறிகள் சுழல்கின்றன. பெரிய பெரிய தொழிற்சாலைகள் இயங்கி, புதுப்புது பொருட்களை உருவாக்குகின்றன. அதைப் போலத்தான் விசுவாசம்.

விசுவாசமும் ஜெபமும் ஒன்றோடொன்று இணையும்போது ஆத்துமாக்களை கர்த்தருக்கென்று ஆதாயம் செய்ய முடியும். விசுவாசமுள்ளவன் ஒருபோதும் சோம்பேறியாய் இருக்கமாட்டான். யாக்கோபு எழுதுகிறார்: “என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்” (யாக். 2:14,17).

விசுவாசத்தினாலே உங்களுடைய கிரியைகள் நீதியை நடப்பிக்கிறவைகளாய், நீதியின் தேவனை மகிமைப்படுத்துகிறவைகளாய் இருக்கட்டும். நம்முடைய தேவன் நமக்கு நீதியாய் இருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது (எரே. 23:6). விசுவாசத்தினாலே நீங்கள் அவருடைய நீதியைப் பெற்று நீதிமான்களாகிறீர்கள். இது எத்தனை பாக்கியம்! கிறிஸ்து உங்களுக்கு நீதியாயிராவிட்டால் உங்களுடைய நிலை என்ன? இந்த உலகத்தில் நீதியின் கிரியையை நடப்பிப்பது எப்படி?

ஏசாயா சொல்லுகிறார், “எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தை போல இருக்கிறது” (ஏசாயா 64:6). யோபு பக்தன் கேட்கிறார், “தேவனுக்கு முன்பாக மனுஷன் நீதிமானாயிருப்பதெப்படி?” (யோபு 9:2). “…ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?” (யோபு 15:14). “எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை” (ரோமர் 3:20). “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை” (ரோமர் 3:10) என்று வேதம் சொல்லுகிறது.

  கிறிஸ்துவே உங்களது நீதியாயிருக்கிறார். அவரே உங்களை நீதிகரித்து நீதிமான் களாக்கியிருக்கிறார். வேதம் சொல்லுகிறது, “மனுஷன்… விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான்” (ரோம. 3:28). கிறிஸ்து உங்களை நீதிகரித்திருக்கிறார் என்பதை நீங்கள் விசுவாசிக்கத் தவறுவீர்களானால் குற்றமனசாட்சி உங்களை வாதித்துக் கொண்டேதான் இருக்கும். சாத்தான் உங்களை மேற்கொண்டு தோற்கடித்துக் கொண்டேதான் இருப்பான்.

தேவபிள்ளைகளே, நம் முற்பிதாக்கள் விசுவாசத்தினாலே நீதியை நடப்பித்திருக்கையில், நீங்களும் நீதிமான்களாக்கப்பட்டு நீதியை நடப்பிக்க வேண்டும் அல்லவா?

நினைவிற்கு:- “விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே” (யாக். 2:22).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.