AppamAppam - Tamil

Dec 15 – விசுவாசித்தேன்!

“விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன்” (2 கொரி. 4:13).

நீங்கள் பேசும்போது உங்கள் வார்த்தைகள் விசுவாசத்தோடு வெளியே வரட்டும். விசுவாச வார்த்தைகளைப் பேசப் பேச, வாக்குத்தத்த வசனங்களை வாயினால் அறிக்கையிட அறிக்கையிட நீங்கள் இன்னும் விசுவாசத்தில் வல்லவர்களாய் மாறுவீர்கள். ஆம், உலகத்தில் மிகவும் வலிமையுடையது விசுவாசத்தினால் நிரம்பிய வார்த்தைகளாகும்.

கர்த்தரை விசுவாசிக்கிறவர்கள் எந்த சூழ்நிலையானாலும், விசுவாச வார்த்தைகளை, ஜெயத்தின் வார்த்தைகளை, துதியின் வார்த்தைகளை, மனமகிழ்ச்சியின் வார்த்தைகளைப் பேசுகிறார்கள். அப்.பவுல் எழுதுகிறார்: “விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம்” (2 கொரி. 4:13).

மீன் குஞ்சுகளுக்கு நீந்த கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. பிள்ளைகள் பிறக்கும்போது, அவைகளுக்கு சுவாசிக்க கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. அப்படியே விசுவாச ஜீவனுள்ளவர்களுக்கு விசுவாச வார்த்தைகளை கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. அவை இயற்கையாகவே உள்ளத்திலிருந்து புறப்பட்டு வரும். நம் தேவனாகிய கர்த்தர் விசுவாச வார்த்தைகளைப் பேசுகிறவர். சிருஷ்டிப்பு எல்லாம் அவர் பேசிய விசுவாச வார்த்தையினாலேயே உண்டாயின.

ஒவ்வொரு நாளும் உண்டாகக்கடவது என்னும் வார்த்தையை சொல்லிக்கொண்டே இருந்தார். அப்படி ஆறு நாட்கள் அவர் பேசியதின் விளைவாக சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், காணப்படுகிறவைகள், காணப்படாதவைகள் யாவும் சிருஷ்டிக்கப்பட்டது. வேதம் சொல்லுகிறது, “விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்” (எபி. 11:3).

நீங்கள் விசுவாச வார்த்தைகளைப் பேசின கர்த்தருடைய பிள்ளைகள். தகப்பன் அவ்விதமான வார்த்தைகளைப் பேசியிருந்தால் அவருடைய பிள்ளைகளாகிய நீங்களும் விசுவாச வார்த்தைகளைப் பேச வேண்டும் அல்லவா? இன்று அநேகருடைய தோல்விக்கு காரணம் அவர்கள் நாவிலே எப்போதும் அவிசுவாசமான வார்த்தைகள் இருப்பதுதான்.

“மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்” (நீதி.18:21). ஆகவே ஜீவனைப்பற்றி பேசுங்கள். விசுவாசமுள்ள வார்த்தைகளைப் பேசுங்கள். அது உங்களை பலப்படுத்துகிறது மட்டுமல்ல, மற்றவர்களுடைய இருதயங்களை காயங்கட்டவும், நொறுங்கிய குடும்பங்களை மீண்டும் கட்டியெழுப்பவும், பசுமையான நாட்களைக் கொண்டு வரவும் பயனுள்ளதாய் இருக்கும்.

விசுவாசம் பரலோகத்தை அசைக்கும் ஒரு மகிமையான வல்லமை. இதற்கு உருவாக்கவும், அரிய பெரிய காரியங்களைச் செய்யவும் வல்லமையுண்டு. தேவ பிள்ளைகளே, அவிசுவாசத்தை உதறிவிட்டு விசுவாசத்தை செயல்படுத்துங்கள். உங்கள் உள்ளத்திலிருந்து விசுவாச ஊற்றுகள் சுரந்து வரட்டும்.

நினைவிற்கு:- “ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? …அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா?” (யாக். 3:11,12).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.