AppamAppam - Tamil

Nov 27 – சீக்கிரமாய்!

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது” (வெளி. 22:12).

வெளிப்படுத்தின விசேஷத்தில், ‘சீக்கிரமாய்’ என்ற பதம் அடிக்கடி இடம் பெறுகிறது. இப்புத்தகத்தின் முதலாம் அதிகாரம், முதலாம் வசனமே “சீக்கிரத்தில்” என்று ஆரம்பிக்கிறது. “சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளை தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு… யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது (வெளி. 1:1). அதுபோலவே வெளிப்படுத்தலின் முடிவில், “மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன்” (வெளி. 22:20) என்று எழுதப்பட்டிருக்கிறது.

 “சீக்கிரம்” என்ற வார்த்தைக்கு அவசரம், துரிதம் என்பது அர்த்தமாகும். நீங்கள் நிறைவேற்ற வேண்டிய பணிகளை மிக வேகமாய் நிறைவேற்ற வேண்டும் என்று அந்த வார்த்தை உங்களை அவசரப்படுத்துகிறது. உதாரணமாக ஒருவர் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு துரிதமாய் அவருக்கு உதவ முன்வருவீர்கள்! வேகமாய்ப் போய் கார் பிடித்துக் கொண்டு வந்து, சீக்கிரமாய் ஆஸ்பத்திரியில் அனுமதிப்பீர்கள். சீக்கிரமாய் பணியாற்றி எப்படியாகிலும் அந்த உயிரைக் காப்பாற்றும்படி போராடுவீர்கள்.

அதுபோலவே உலகத்தின் முடிவுக்கு வந்திருக்கிற நீங்கள், துரிதமாய் செயல்பட்டு உங்களுடைய ஆத்துமாவைக் காத்துக்கொள்வதுடன் மற்ற ஆத்துமாக்களையும் ஆதாயம் செய்ய வேண்டும். கர்த்தருடைய வருகையை எதிர்நோக்கி வேகமாய் முன்னேறி செல்ல வேண்டும். இப்பொழுது நீங்கள் வரலாற்றின் எல்லைக்குள் வந்து விட்டீர்கள். இயேசு சீக்கிரமாய் வருகிறார் என்பதை வருகையின் அடையாளங்கள் எல்லாம் இந்நாளில் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றன. நீங்கள் சீக்கிரமாய் வருகைக்காக ஆயத்தப்பட வேண்டாமா?

 சோதோம் கொமோரா அழிக்கப்படுவதற்கு முன்பாக கர்த்தர் லோத்துவை துரிதப்படுத்தினார். வேதம் சொல்லுகிறது, “பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி அவனைத் துரிதப்படுத்தினார்கள். அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்” (ஆதி. 19:15,16).

மேலும் லோத்துவிடம் கர்த்தர் சொன்னது என்ன தெரியுமா? “உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப்பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ” (ஆதி. 19:17). துரிதத்தை ஏற்படுத்தும் எத்தகைய வார்த்தைகள்!

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய வருகை மிக சமீபமாய் இருக்கிறபடியினால் இன்னும் அதிக ஜெப ஜீவியத்தோடு, அதிக தெய்வீக அன்போடு முன்னேறிச் செல்லுவீர்களா?

நினைவிற்கு:- “தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்” (2 பேதுரு 3:12).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.