AppamAppam - Tamil

Nov 30 – சூழ்நிலைக்கு அப்பாற்பட்ட தரிசனம்!

“கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கி பார். நீ பார்க்கிற இந்த பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுப்பேன்”(ஆதி.13:14,15).

 கர்த்தர் ஆபிரகாமை நோக்கி, “நீ இருக்கிற இடத்திலிருந்து உன் கண்களை ஏறெடுத்துப்பார். நீ எப்போதும் உன் கூடாரத்திற்குள்ளே உட்கார்ந்துக் கொண்டிருக்கிறாய். உன்னுடைய கூடாரத்தின் அளவு எவ்வளவாயிருக்கிறதோ அதேபோலதான் உன் தரிசனமும் இருக்கிறது. நீ கூடாரத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார். நீ எதையெல்லாம் பார்க்கிறாயோ அதையெல்லாம் உனக்குத் தருவேன்” என்றார்.

தேவபிள்ளைகளே, நீங்கள் இருக்கிற இடத்திலே உங்களுடைய கண்களை ஏறிட்டு விசுவாசக் கண்களோடு பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். இன்றைக்கு நீங்கள் ஒரு கடினமான சூழ்நிலையில், வசதியில்லாத சூழ்நிலையில், துக்கத்தோடு இருக்கலாம். நீங்கள் தவறான தீர்மானங்களை எடுத்ததினால் கஷ்டமான சூழ்நிலையில் கடந்து போகலாம். எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையில்லாமலிருக்கலாம். ஆனால் உங்களுடைய கண்களை ஏறிட்டுப் பார்த்து, சூழ்நிலைக்கு அப்பாற்ப்பட்ட காரியங்களை நீங்கள் தரிசிக்க வேண்டும்.

உங்களுடைய சூழ்நிலையையே நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது. நீங்கள் ஒரு தரிசனமுடையவர்களாய் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, கர்த்தர் உங்களுக்காக ஆயத்தம்பண்ணி வைத்திருக்கிறவைகளை பெற்றுக்கொள்ளுவீர்கள். பெரிய ஆசீர்வாதங்கள் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறதைக் காண்பீர்கள். நீங்கள் எதையெல்லாம் காண்கிறீர்களோ அதையெல்லாம் கர்த்தர் உங்களுக்குத் தருவார்.

இன்றைக்கு நீங்கள் ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கலாம். இதைத் தாண்டி உங்களுடைய தரிசன கண்களினால் சொந்தமாய் குடியிருக்கிற வீட்டை நீங்கள் பார்க்க வேண்டும். அப்போது கர்த்தர் உங்கள் வாழ்க்கையிலே அதைச் செய்வார். பிசாசானவன் உங்களுடைய சூழ்நிலையைப் பார்த்து உங்களை அமுக்கிக் கொண்டேயிருப்பான்.

உங்களுடைய இயலாமையை, உங்களுடைய பிரச்சனையை மட்டுமே கவனத்தில் கொண்டு வருவான். மற்றவர்கள் மத்தியில் உங்களை தலைகுனிய வைக்க முயற்சி செய்வான். அவிசுவாசத்தைக் கொண்டுவந்து உங்களை சோர்ந்து போகப்பண்ணுவான். உனக்கு படிப்பு இல்லை. தாலந்து இல்லை, திறமையில்லை, நீ எதையும் சாதிக்கவே முடியாது என்று சொல்லுவான். உங்களுடைய சூழ்நிலையை தாண்டி ஒருநாளும் பார்ப்பதற்கு அனுமதிக்கவே மாட்டான்.

  காரணம், உங்களுடைய மனதை தோல்வியின் எண்ணங்களினாலும், துக்கத்தின் எண்ணங்களினாலும் நிரப்பிவிட்டால் ஐயோ, நான் பிரயோஜனமில்லாதவன் என்னாலே ஒன்றும் செய்ய முடியாது என்பதை மட்டுமே நீங்கள் சிந்தித்துக்கொண்டிருப்பீர்கள் என்பது அவனுக்குத் தெரியும்.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையிலே செய்ய வேண்டியதை நீங்கள் தரிசனக் கண்களோடு பாருங்கள். உங்களுடைய தரிசனம் உங்களுடைய சூழ்நிலையைத் தாண்டி பார்க்கக்கூடியதாயிருக்கட்டும்.

நினைவிற்கு :- “கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார்” (ஆதி. 12:7).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.