AppamAppam - Tamil

Nov 26 – உன் கிரீடத்தை!

“இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு” (வெளி. 3:11).

கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது. உங்களுக்காக தேவன் வைத்திருக்கிறவற்றைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி நீங்கள் ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். ‘உன்னுடைய கிரீடத்தை வேறு ஒருவன் எடுத்துக்கொள்ளாதபடி உனக்குள்ளதை பற்றிக்கொண்டிரு’ என்று கர்த்தர் சொல்லுகிறார். சாதாரணமாக நீங்கள் பெற்றுக்கொள்ளும் கிரீடம் இரண்டு வகையானது. ஒன்று பரம்பரையாக வரும் கிரீடம். அடுத்தது, நீங்கள் சம்பாதித்துக் கொள்ளும் கிரீடம்.

உதாரணமாக: இங்கிலாந்து தேசத்து ராணியான எலிசபெத்தின் கிரீடம் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்த கிரீடமாகும். எலிசபெத் மகாராணி மறைந்து போய்விட்டால், அந்த கிரீடம் அவருடைய மகனாகிய பிரின்ஸ் சார்லஸுக்கு வந்துவிடும். அதே நேரத்தில், ஒரு யுத்த வீரன் போரில் வென்று, எதிராளியின் கிரீடத்தை எடுத்துச் சூட்டுகிற கிரீடமானது, “வெற்றியின் கிரீடம்” என்று அழைக்கப்படும். அந்த கிரீடம் எளிதில் கிடைக்காது. அந்த கிரீடத்தை மிகவும் பிரயாசப்பட்டு யுத்தம் செய்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

 வேதம் சொல்லுகிறது: “அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன (வெளி. 19:12). எப்படி அவருக்கு அநேக கிரீடங்கள்? அவருக்கு இயற்கையாக உள்ள கிரீடமுமுண்டு. அவர் சம்பாதித்த கிரீடமுமுண்டு. அவர் பிதாவினுடைய ஒரே குமாரன். ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவுமாய் இருக்கிறார். பிதாவானவர் தம்முடைய சிங்காசனத்தையும் ஆளுகையையும் தம்முடைய குமாரனுக்குக் கொடுத்திருக்கிறார். இயேசு பரலோகத்தில் வாசமாயிருக்கிறபடியினால் அவருடைய சிரசின்மேல் பிதா சூட்டின கிரீடமுண்டு.

அதே நேரத்தில் கிறிஸ்துவுக்கு மற்ற கிரீடங்களுமுண்டு. அவர் உலகத்தில் வந்து சாத்தானை ஜெயித்தார். கல்வாரி சிலுவையிலே உலகம், மாமிசம், பிசாசை ஜெயங்கொண்டார். இயேசு சொன்னார், ‘நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட வீற்றிருக்கிறேன்’ (வெளி. 3:21). உங்களுடைய நிலைமை என்ன? நீங்கள் கிறிஸ்துவினுடைய பிள்ளைகளாயிருக்கிறீர்கள். அவருடைய பிள்ளைகள் என்ற உரிமை உங்களுக்கு உண்டு. அந்த உரிமையினால் இயேசு தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக உங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கியிருக்கிறார் (வெளி. 1:6).

இயேசு உங்களை ராஜாக்களாக்கியிருக்கிறபடியினாலும், நீங்கள் அவருடைய பிள்ளைகளாயிருக்கிறபடியினாலும் உங்களுக்கு வரும் கிரீடமுண்டு. அதே நேரத்தில் நீங்கள் ஜெயங்கொண்டவர்களாய் விளங்கும்போது கர்த்தர் விசேஷ கிரீடத்தை உங்களுக்குத் தந்தருளுவார். நீங்கள் மரணபரியந்தம் உண்மையாயிருக்கும்போது ஜீவகிரீடத்தைப் பெற்றுக் கொள்ளுவீர்கள் (வெளி. 2:10). இச்சையடக்கத்தோடு ஓட்டத்தை ஜெயமாய் ஓடி முடிக்கும்போது அழிவில்லாத கிரீடத்தைப் பெற்றுக் கொள்ளுவீர்கள் (1 கொரி. 9:25). அவருடைய பிரசன்னமாகுதலை விரும்பும்போது நீதியின் கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளுவீர்கள் (2 தீமோ. 4:8).

நினைவிற்கு:- “எங்களுக்கு நம்பிக்கையும், சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்” (1 தெச. 2:19).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.