AppamAppam - Tamil

Nov 25 – எபேசு சபைக்கு!

“எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்” (வெளி. 2:1).

அப். பவுலின் இடைவிடாத ஊழியத்தினாலும், கண்ணீரின் ஜெபத்தினாலும் உருவானதுதான் எபேசு சபை. அந்த சபை ஆத்தும ஆதாயம் செய்கிற சபையாக, கர்த்தருடைய அன்பில் நிறைந்திருக்கிற சபையாக இருக்கவேண்டுமென்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அந்தச் சபையோ, வீணான காரியத்திற்குள் தனது கவனத்தைச் செலுத்தியது.

 அப்போஸ்தலர் அல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலர் என்று சொல்லிக்கொள்வதை சோதித்து, அவர்கள் பொய்யர் என்பதை நிரூபிக்க முற்பட்டது. எவ்வளவுக்கெவ்வளவு அவர்கள் பொய்யான அப்போஸ்தலரைக் கண்டறிந்தார்களோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்களை தங்களை அறியாமலேயே ஆதியில் கொண்டிருந்த அன்பிலே குறைவுபட்டுப் போனார்கள். கர்த்தர் துக்கத்தோடு அவர்களை எச்சரித்து, “நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கி விடுவேன்” என்றார் (வெளி. 2:5).

ஒரு ஊழியரின் வீட்டுக்கு எதிரிலே ஒரு விலைமாது குடி வந்தாள். அதுவரை நன்றாய் ஊழியம் செய்துகொண்டு ஜெபித்துக்கொண்டிருந்த அந்த ஊழியர் விலைமாது வந்தவுடனே அவளுடைய வீட்டுக்கு வருகிறவர்கள் யார், போகிறவர்கள் யார் என்பதில் அதிகம் கவனம் ஆரம்பித்தார். ஒவ்வொருவர் அந்த வீட்டுக்குள் நுழையும்போதெல்லாம் ஒரு கல்லை எடுத்து தன்னுடைய வீட்டின் முற்றத்திலே போட்டுக் கொள்வார். சில நாட்களில் அந்த கற்கள் ஒரு பெரிய குவியலாக குவிந்து விட்டது. இவள் இப்படி விபச்சாரம் செய்கிறாளே, இத்தனை வாலிபரை கெடுக்கிறாளே என்று அந்தக் கற்குவியலைப் பார்த்து குமுறினார்.

அந்த விலைமாதோ, தனது வாழ்க்கையின் முடிவிலே தன் பாவங்களுக்காக மனங்கசந்து அழுது, மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டவளாய்ப் பரலோகத்திற்கு கடந்து சென்றாள். ஆனால் குற்றம் கண்டுபிடித்த அந்த ஊழியரோ, கற்குவியலைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டுக் கொண்டேயிருந்துவிட்டு, மரித்து பாதாளத்திற்குள் செல்ல வேண்டியதாயிற்று. நீங்கள் உங்களுடைய பரிசுத்தத்தை பாதுகாக்க வேண்டிய நேரம் இது! அதை விட்டுவிட்டு மற்றவர்களை குற்றவாளிகள் என்று தீர்த்துக்கொண்டிருப்பதில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளாதேயுங்கள்.

ஆயக்காரன்: ‘பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்’ என்று சொன்ன மாத்திரத்திலே கர்த்தர் அவனை நீதிமானாக்கக் கிருபையுள்ளவராயிருந்தார். இயேசு இந்த பூமியிலிருந்த நாட்களில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூட பந்தியிருந்தார்கள் (மத். 9:10). வேதம் சொல்லுகிறது, “ஒருவன்… பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால் அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்” (ரோமர் 4:5). தேவபிள்ளைகளே, எந்த விதத்திலும் மற்றவர்களை நியாயந்தீர்த்து குற்றப்படுத்தாமல், உங்களையே நிதானித்து அறிவீர்களாக.

நினைவிற்கு:- “இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?” (மத். 7:4).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.