AppamAppam - Tamil

Nov 24 – ஆவியினாலே பரிசுத்தம்!

“கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும்…” (2 தெச. 2:13).

நீங்கள் ஆவியினாலே பிறந்து, ஆவியானவர் தரும் வார்த்தைகளைப் பேசி, ஆவியானவரால் நடத்தப்படவும் வேண்டும். மட்டுமல்ல, ஆவியானவரினாலே பரிசுத்தமாக்கப்பட வேண்டும். கிறிஸ்தவ ஜீவியம் செய்ய விரும்புகிறவர்கள் ஒவ்வொரு நாளும் பரிசுத்தத்தின்மேல் பரிசுத்தம் அடைந்து கொண்டேயிருக்க வேண்டும்.

அப். பவுல் சொல்லுகிறார்: “சமாதானத்தின் தேவன்தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக” (1 தெச. 5:23). பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிப்பதில்லை. இரண்டாவது வருகையிலே கர்த்தர் மத்திய ஆகாயத்தில் வருவதைக் காணவும் முடியாது. எடுத்துக் கொள்ளப்படவும் முடியாது. உங்களுக்குப் பரிசுத்தத்தைத் தரும்படி கர்த்தர் வைத்திருக்கிற காரியங்கள் மூன்றுண்டு. முதலாவது, கிறிஸ்துவின் இரத்தம். இரண்டாவது, தேவனுடைய வார்த்தை. மூன்றாவது, பரிசுத்த ஆவியானவர். இந்த மூன்றின் மூலமாக கர்த்தர் உங்களைப் பரிசுத்தப்படுத்துகிறார்.

பரிசுத்தமாக்கப்பட நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்று ஒருவேளைக் கேட்கலாம். உங்களை முழுவதுமாக பரிசுத்த வாழ்க்கைக்கு அர்ப்பணிக்க வேண்டும். பரிசுத்தத்தின்மேல் இடைவிடாத தாகமும், வாஞ்சையும் உங்களுடைய உள்ளத்தில் எழுந்து கொண்டேயிருக்க வேண்டும். அவ்வப்போது உங்களை தேவசமுகத்திலே நிறுத்தி குற்றங்குறைகளை நீக்கி சுத்திகரித்துக்கொள்ள வேண்டும். மட்டுமல்ல, உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தை பரிசுத்தத்திற்காக பிரதிஷ்டை செய்துவிட வேண்டும். அப். பவுல் எழுதுகிறார்: “நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1).

ஆம், உங்களுடைய சரீரத்தை பரிசுத்தத்திற்கென்று ஒப்புக்கொடுக்க வேண்டும். காரணம், உங்களுடைய சரீரமே கர்த்தருடைய ஆலயமாயிருக்கிறது. ஆகவே உங்களுடைய சரீரத்தைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள். உலகத்தின் ஆசாபாசங்களுக்கும், மனமும் மாம்சமும் விரும்புகிற காரியங்களை நிறைவேற்றுவதற்கும் உங்களுடைய அவயவங்களை விற்றுப் போட வேண்டாம்.

உலகத்தினர் அசுத்தத்திற்குள்ளும், இரகசிய பாவங்களுக்குள்ளும் விழுந்து தங்களைத் தாங்களே தீட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தேவபிள்ளைகளே, கர்த்தர் இந்த பூச்சக்கரத்திலுள்ள சகல ஜனங்களிலும் உங்களை தனக்கென்று பரிசுத்த ஜனமாய் தெரிந்து கொண்டிருக்கிறார். நீங்கள் வேறு பிரிக்கப்பட்டவர்கள். கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்கள். கிறிஸ்துவினுடைய வாக்குத்தத்தங்களுக்கும் கிருபைகளுக்கும் உடன் சுதந்தரவாளிகள். ஆகவே உங்கள் சரீரத்தை பரிசுத்தத்தோடு பாதுகாத்துக்கொள்ளுங்ள்.

நினைவிற்கு:- “உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?” (1 கொரி. 6:19).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.