AppamAppam - Tamil

Nov 21 – பரீட்சைக்கு நில்லுங்கள்!

“நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்” (2 கொரி. 13:5).

 பரீட்சைக்கு நிற்பதை பொதுவாக யாரும் விரும்புவதில்லை. சோதனைகளையும், போராட்டங்களையும் தவிர்க்கவே விரும்புகிறார்கள். உதாரணமாக, ஒரு மாணவன் பரீட்சையில் தோற்று விட்டால் ஒரு ஆண்டு காலம் வீணாகிவிடும். அதே நேரத்தில், பரீட்சையில் வெற்றி பெற்றுவிட்டால் அந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. கிறிஸ்தவ வாழ்க்கையிலும் பல பரீட்சைகளுண்டு. இயேசு கிறிஸ்துவைப் பாருங்கள். அவரும் பரீட்சிக்கப்பட்டார். கர்த்தர் அந்த பரீட்சையை முறுமுறுப்போடு சகிக்கவில்லை. அவர் மனமுவந்து அதற்காக ஒப்புக் கொடுத்தார். வேதம் சொல்லுகிறது, “இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்” (மத். 4:1).

  அவர் வனாந்தரத்திற்கு சென்றார் என்று வேதம் சொல்லுகிறது. அங்கு துஷ்ட மிருகங்கள் காணப்படக்கூடும். பேசுவதற்கு ஆட்கள் யாரும் இருந்திருக்கமாட்டார்கள். மட்டுமல்ல, அவர் அங்கே உபவாசமிருந்தார் என்று வேதம் சொல்லுகிறது. சரீரத்தின் பசி அவரை வாட்டி வதக்கியிருக்கும். எனினும் கர்த்தர் அந்த சோதனைகளுக்குள்ளாகவும், பரீட்சைக்குள்ளாகவும் கடந்துசெல்ல முன் வந்தார். அது சோதனை மாத்திரமல்ல, அது ஒரு பரீட்சையுங்கூட! சாத்தான் அவரை சோதித்து பரீட்சிக்கப் பார்த்தான். அங்கே அவருடைய விசுவாசம் எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டு பரீட்சிக்கப்பட்டது. அந்த சோதனையை தாண்டி வந்தபோது ஆவியின் வரங்களையும் வல்லமைகளையும் அளவில்லாமல் பெற்றுக்கொண்டார். அப். பவுல், சிலரை குறிப்பிட்டு அவர்கள் “விசுவாச விஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள்” (2 தீமோ. 3:8) என்று எழுதுகிறார். சிலர் தங்களுக்கு பெரிய விசுவாசமிருக்கிறது. மலைகளை பெயர்த்து விடுவேன். சேனைக்குள் பாய்ந்துவிடுவேன் என்கிறார்கள். ஆனால் பரீட்சை வரும்போதோ அதற்கு நிற்காமல் ஓடிப்போய் விடுகிறார்கள்.

அப். பவுல், “நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள். நாங்களோ பரீட்சைக்கு நில்லாதவர்களல்லவென்பதை அறிவீர்களென்று நம்புகிறேன்” (2 கொரி. 13:5,6) என்று எழுதுகிறார்.

 ஆபிரகாம் விசுவாசத்தின் தகப்பன் என்று அழைக்கப்படுகிறார். அப்படிப்பட்ட ஆபிரகாமுடைய விசுவாசம்கூட பரீட்சிக்கப்பட்டது. அப்படியே இஸ்ரவேல் ஜனங்களின் விசுவாசத்தை கர்த்தர் நாற்பது வருஷ வனாந்தர பாதையிலே பரிசோதித்துப் பார்த்தார். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு விசுவாசப் பரிட்சைகளை சந்திக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு ஆவிக்குரிய ஜீவியத்தில் பெரிய முன்னேற்றம் காணப்படும்.

தேவபிள்ளைகளே, பரீட்சையிலே ஜெயங்கொண்டவர்களாய் முன்னேறிச் செல்லுவீர்களாக.

நினைவிற்கு:- “உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” (யாக். 1:3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.