AppamAppam - Tamil

Nov 18 – ராஜாவுக்கு முன்பாக!

“பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரை பண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான்” (அப். 27:24).

கொந்தளிக்கும் புயலில் ஒரு கப்பல் அலை மோதுகிறது. சீறும் புயல் காற்று, பயங்கரமான அலைகள். கட்டுக்கடங்காமல் சென்ற கப்பலை கட்டுக்குள் கொண்டுவர செய்த முயற்சிகளெல்லாம் வீண். சரக்குகள் கடலிலே எறியப்படுகின்றன. எங்கும் இருள், காரிருள், அநேக நாட்களாய் சூரியன் தெரியவில்லை. பிரயாணிகளுக்கோ தப்பிப் பிழைப்போம் என்ற நம்பிக்கையில்லை. மரண பயம் உள்ளத்தை கவ்விப் பிடித்து உலுக்குகிறது.

அது எந்தக் கப்பல், அதில் யார் பிரயாணம் செய்கிறார்கள் என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். அந்தக் கப்பல் ரோமாபுரியை நோக்கி பிரயாணம் செய்து கொண்டிருக்கிறது. காவலில் வைக்கப்பட்ட கைதியாக அப். பவுல் அந்தக் கப்பலில் இருக்கிறார். நூற்றுக்கதிபதிகள், போர்ச்சேவகர்கள், இன்னும் ஏராளமான மனுஷர் அந்தக் கப்பலில் பிரயாணம் செய்கிறார்கள்.

அப்பொழுது கர்த்தருடைய தேவதூதன் தேவனுடைய மனுஷனாகிய பவுலுக்குத் தரிசனமானான். வேதம் சொல்லுகிறது, “பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான் (அப். 27:24). பதினான்கு நாட்கள் போராட்டத்திற்கு பிறகு கடல் அலைகள் அமர்ந்தன; அமைதி உண்டாயிற்று. அவர்கள் சுகமாக கரை சேர்ந்தார்கள். கரை சேர்ந்த அந்தத் தீவின் பெயர் “மெலித்தா” என்பதாகும். அந்நியராகிய அந்தத் தீவார் அவர்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல என்று வேதம் சொல்லுகிறது (அப். 28:1,2).

  தேவபிள்ளைகளே, ஒவ்வொரு கொந்தளிப்புக்கும் பின்னால் ஒரு அருமையான தேவ ஆறுதலுண்டு. கொந்தளிப்பின் நேரத்திலே மனம் சோர்ந்துபோகாதிருங்கள். உங்கள் கண்களை விசுவாசத்தோடு கர்த்தரை நோக்கி ஏறெடுப்பீர்களாக. ‘பயப்படாதே, நீ ராஜாவுக்கு முன்பாக நிற்க வேண்டும்’ என்கிற இனிமையான குரலை உங்கள் காதுகள் கேட்கும்.

ஒவ்வொரு கொந்தளிப்புக்கும் பின்னால் அன்பு பாராட்டுகிற மெலித்தா மக்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். கர்த்தர் உங்களோடுகூட இருக்கிறார். அவர் கடல் கொந்தளிப்பின்மேல் நடக்கிறவர். காற்றையும், கடலையும் அதட்டி அமைதல் உண்டாகப்பண்ணுகிறவர். அவர் சொல்ல ஆகும். அவர் கட்டளையிட நிற்கும்.

நீங்கள் ஆயிரம் பதினாயிரம் தேவதூதர்களோடு, கர்த்தாதி கர்த்தாவின் பிரசன்னத்தில் நித்தியமாக நின்று அவரைத் துதிக்கும்படி அழைக்கப்பட்டவர்கள். இந்த போராட்டமான அலைகளுக்கு அப்பால் தூரத்தில் ராஜாவின் அரண்மனை உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? ஒளிமயமான தேசம் உங்கள் பார்வைக்கு தெரியவில்லையா?

தேவபிள்ளைகளே, ஒவ்வொரு யூரோக்கிலிதோன் என்னும் கடுமையான காற்றுக்கு பின்னாலும் ஒரு ஆறுதலான மெலித்தா உண்டு. ஒவ்வொரு மாராவுக்குப் பின்னாலும் மதுரமான ஏலிம் உண்டு! உபத்திரவங்களில் சோர்ந்துபோகாமல் திடன்கொள்ளுவீர்களாக.

நினைவிற்கு:- “நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்; கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்” (சங். 34:19).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.