AppamAppam - Tamil

Nov 16 – மலையே தள்ளுண்டுபோ!

“எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும்” (மாற். 11:23).

  தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். மலைகளுக்கு கட்டளையிட்டு அவைகளை சமுத்திரத்திலே தள்ளுங்கள் என்று வேதம் சொல்லுகிறது. மாற்கு சுவிசேஷத்திலே “அவன் சொன்னபடியே ஆகும்” (மாற்கு 11:23) என்றும், சங்கீதத்திலே, “அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” (சங். 1:3) என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

“மலைகளை பெயர்க்கத்தக்க விசுவாசம்” (1 கொரி. 13:2) என்று வேதம் சொல்லுகிறது. உங்களுடைய விசுவாசமானது மலைகளைக்கூட பெயர்க்குமாம். சிலர் பெரிய பாறைகளை பெயர்ப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு கடப்பாறையை வைத்து அந்த பாறையின் ஒரு பகுதியிலே குத்துவார்கள். ஒரு ஆதார கல்லை அடியிலே வைத்து நெம்புகோலின் தத்துவப்படி மறு பக்கத்திலிருந்து அழுத்தி கற்களை பெயர்ப்பார்கள்.

உங்களுக்குத் தடையாக இருக்கும் பெரிய மலையை விசுவாசத்தோடு சந்தியுங்கள். அதிலே கடப்பாறையைப் போன்ற கர்த்தருடைய வாக்குத்தத்த வசனங்களை செலுத்துங்கள். ஆதார கல்லாக கிறிஸ்துவை வைத்துக் கொள்ளுங்கள். நெம்புகோலின் மற்ற பகுதியிலே விசுவாச வல்லமையை செயல்படுத்துங்கள். அப்போது எந்த மலையானாலும் பெயர்ந்துவிடும். எந்தத் தடையானாலும் தகர்ந்து போய்விடும்.

ஒரு சகோதரி ஒரு அனாதை பள்ளிக்கூடம் கட்டுவதற்கு இடம் வேண்டுமென்று கவர்னரிடம் விண்ணப்பம் செய்தாள். ஆனால் அந்த கவர்னரோ, தேவனை மதியாதவனாயும், பெருமையுள்ளவனாயும் இருந்தான். அவன் அந்த சகோதரிக்கு பாறைகள் நிறைந்த சிறிய மலைப் பகுதியை கொடுத்து, ‘சகோதரியே, விசுவாசத்தினால் இந்த பாறைகளைப் பெயர்த்து கடலிலே தள்ளிவிட்டு, அனாதை விடுதியைக் கட்டிக்கொள்’ என்றான். அந்த சகோதரி அந்த கற்கள் நிறைந்த மலைப்பகுதியை ஏற்றுக்கொண்டாள். ஒவ்வொரு நாளும் அந்த மலையைப் பார்த்து, ‘மலையே நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டு போ’ என்று சொல்லி ஜெபித்தாள்.

சில நாட்களுக்குள் காண்ட்ராக்டர் ஒருவர் இந்த சகோதரியிடம் வந்து, ‘அம்மா, அந்த மலையிலுள்ள கற்களை உடைத்து எடுத்து கடலிலே பாலம் போட எங்களுக்கு அனுமதி தருவீர்களா’ என்று கேட்டு, அதற்கான ஒரு பெருந்தொகையையும் கொடுத்தார். சில நாட்களுக்குள் அந்த மலை வெடி வைத்து தகர்க்கப்பட்டது, சமபூமியானது. அந்த சகோதரி அந்த காண்ட்ராக்டர் கொடுத்த பெருந்தொகையினால் அந்த இடத்தில் ஒரு அருமையான அனாதை விடுதியைக் கட்டினார்கள். ஆம், கர்த்தருடைய வார்த்தை எழுத்தின்படியாகவும் நிறைவேறியது. ஆவியின்படியாகவும் நிறைவேறியது.

தேவபிள்ளைகளே, உங்களுடைய வாழ்க்கையில் இருக்கிற மலைகள் என்ன? தடைகள் என்ன? நீண்ட காலமாய் தடைப்பட்டு வருகிற காரியங்கள் என்ன? மலைகளைப் பார்த்து பேசுங்கள். விசுவாசத்தோடு பேசுங்கள். நிச்சயமாய் அந்த மலை கடலிலே தள்ளுண்டு போகும்.

நினைவிற்கு:- “பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும்” (ஏசா. 40:4).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.