AppamAppam - Tamil

Nov 15 – பசி தாகம்!

“நீதியின்மேல் பசி தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்” (மத். 5:6).

 இயேசுகிறிஸ்துவின் மலைப் பிரசங்கத்தை மத்தேயு 5-ம் அதிகாரத்தில் நீங்கள் காணலாம். அந்த அதிகாரம், “இயேசு தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்” என்று ஆரம்பிக்கிறது. “வாயைத் திறந்து” என்ற பகுதியை சிந்தித்துப் பாருங்கள். எல்லா ஜனங்களும் அவருடைய வாயையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் வாயைத் திறந்து பேசமாட்டாரா, கிருபையுள்ள வார்த்தைகள் வெளி வராதா, வல்லமையுள்ள வார்த்தையை பொழிந்தருளமாட்டாரா என்று எண்ணி ஏங்கினார்கள்.

கர்த்தர் வாயைத் திறந்து ‘நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்’ என்று குறிப்பிடுகிறார். பசி தாகத்தோடு நீங்கள் வாயை விரிவாய் திறக்கும்போது, கர்த்தர் உங்களுடைய ஆவி, ஆத்துமா, சரீரம் ஆகியவற்றை நன்மையால் நிரப்ப ஆவலுள்ளவராகவும், வல்லமையுள்ளவராகவும் இருக்கிறார்.

உங்களுடைய சரீரத்தைப் பாருங்கள். வாழ்நாளெல்லாம் பசியும் தாகமும் உங்களைவிட்டு விலகுவதேயில்லை. ஒரு குழந்தை எப்போது பிறக்கிறதோ அப்போதே அதற்கு பசியும், தாகமும் ஏற்பட்டு விடுகிறது. உலக வாழ்க்கையில் நீங்கள் எப்படி பசிதாகமுள்ளவர்களாய் இருக்கிறீர்களோ, அதைப்போலவே ஆவிக்குரிய வாழ்க்கையிலும் நீங்கள் பசி தாகமுள்ளவர்களாயிருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களை கர்த்தர், ‘நீங்கள் திருப்தியடைவீர்கள்’ என்று சொல்லி ஆசீர்வதிக்கிறார்.

நீதியின்மேல் பசிதாகம் என்றால் என்ன என்று நீங்கள் ஒருவேளை கேட்கலாம். வேதம் சொல்லுகிறது, “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (1 கொரி. 1:31). ஆம், கிறிஸ்துவே உங்களுக்கு நீதியானார். நீதியான கிறிஸ்துவின்மேல் நீங்கள் பசிதாகமுள்ளவர்களாய் விளங்க வேண்டும்.

உங்களை நீதிமான்களாய் மாற்றவே அவர் கள்ளனைப் போல சிலுவையில் தொங்கினார். உங்களைப் பரிசுத்தராய் மாற்ற பாவமறியாத அவர் பாவமானார். தேவனுடைய தற்சொரூபமான அந்த மகிமையின் ராஜா உங்களுக்காக அடிமையின் ரூபமெடுத்து பாவங்களையும், சாபங்களையும், நோய்களையும் தாமே சுமந்து தீர்த்தார். ஏன்? அவருடைய நீதியை உங்களுக்குக் கொடுத்து உங்களை நீதிமான்களாக்குவதற்காகத்தான்.

வேதம் சொல்லுகிறது, “நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவர் பாவஞ் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை” (1 பேதுரு 2:24,22). “நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்” (யோவான் 19:6) என்று பிலாத்து சாட்சியிட்டான். அப்படிப்பட்ட நீதிபரரான கிறிஸ்துவே உங்களை நீதிமான்களாக்கக்கூடும். நீங்கள் நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா?

  தேவபிள்ளைகளே, அன்றைக்கு சாலொமோனுக்கு ஞானத்தின்மேல் பசிதாகமிருந்தது. எலிசாவுக்கு ஆவியின் வரங்களின் மேல் பசிதாகமிருந்தது. பசி தாகம் உங்களுடைய வாழ்நாளெல்லாம் தொடர்ந்து வரட்டும். ஒவ்வொரு நாளும் அவர் மேலுள்ள நேசம் உங்கள் உள்ளத்தில் பொங்கிக்கொண்டேயிருக்கட்டும்.

நினைவிற்கு:- “அவர்கள் பசிக்கு வானத்திலிருந்து அப்பம் கொடுத்து, அவர்கள் தாகத்துக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணினார்…” (நெகே. 9:15).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.