AppamAppam - Tamil

Nov 14 – ஜெபிப்போமா?

“நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என் முகத்தை அவருக்கு நேராக்கினேன்” (தானி. 9:3).

வேதத்திலுள்ள ஜெபங்களில் தானியேலின் ஜெபம் மிக அருமையான ஒன்றாகும். அது நம்முடைய இருதயத்தை கவர்ந்திழுக்கிறது. தானியேலைப்போல நீங்களும் ஜெபிக்கிறவர்களாக விளங்கினால் நிச்சயமாகவே நம் தேசம் துரிதமாய் கர்த்தரைக் கண்டுகொள்ளும்.

ஜெப நேரத்தில் அவர் எவ்வளவு உறுதியோடிருந்தார் என்பதை தானியேல் 10-ம் அதிகாரத்தில் வாசிக்கலாம். வேதம் சொல்லுகிறது, “அந்த நாட்களில் தானியேலாகிய நான் மூன்று வாரமுழுவதும் துக்கித்துக்கொண்டிருந்தேன். அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறுமட்டும் ருசிகரமான அப்பத்தை நான் புசிக்கவுமில்லை, இறைச்சியும் திராட்சரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை, நான் பரிமளதைலம் பூசிக்கொள்ளவுமில்லை” (தானி. 10:2,3).

தேசத்தில் எழுப்புதல் ஏற்பட நீங்கள் தானியேலைப்போல ஜெபிக்க வேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கிறார். தானியேல் ஊக்கமாய் ஜெபித்தார். பாவ அறிக்கை செய்து ஜெபித்தார். துக்கித்து அழுது ஜெபித்தார். மூன்று வார காலமாய் எந்த ருசிகரமான ஆகாரமும் புசியாமல் விழுந்துகிடந்து ஜெபித்தார். அப்படிப்பட்ட ஊக்கமான ஜெபத்திற்கு கர்த்தரால் பதிலளிக்காமல் இருக்கவே முடியாது. கர்த்தர் உங்களுடைய கண்ணீரின் ஜெபத்தை காண்கிறவர். கண்ணீரின் ஜெபத்திற்கு உடனே பதில் கொடுக்கிறவர்.

வேதத்தில் எசேக்கியா ராஜாவின் ஜெபத்தை தியானித்துப் பாருங்கள். அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டார். ஏசாயா அவரிடத்தில் வந்து ‘உன் நாட்கள் முடிந்தது. மரணத்திற்கு ஆயத்தப்படு’ என்று சொல்லிவிட்டு போய்விட்டார். எசேக்கியா மனங்கசந்து அழுதார். கண்ணீரோடு சுவர் பக்கமாய் திரும்பி, “ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம் பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்” (ஏசா. 38:3).

கர்த்தர் அந்த கண்ணீரின் ஜெபத்தை கேட்டார். அரண்மனையைவிட்டு வெளியே வந்த ஏசாயாவை உடனே கர்த்தர் கூப்பிட்டு நீ திரும்பி எசேக்கியாவினிடத்தில் செல். “அவனுடைய கண்ணிரை கண்டேன் என்றும் அவனுடைய ஆயுசில் பதினைந்து ஆண்டுகள் கூட்டப்பட்டு இருக்கிறது” என்றும் சொல் என்றார். பாருங்கள்! அந்த ஜெபத்திற்கு எவ்வளவு துரிதமாக கர்த்தரிடத்திலிருந்து பதில் வந்தது! ஒரு சில நிமிடங்களுக்குள் தேவனுடைய தீர்மானமே மாற்றப்பட்டது. அந்த அழுகையின் ஜெபம் எசேக்கியா ராஜாவின் ஆயுசை கூட்டிக் கொடுத்தது.

தேவபிள்ளைகளே, இந்தியாவின் இரட்சிப்பிற்காக ஜெபிக்கிறீர்களா? எழுப்புதல் வரவேண்டுமென்று தேவ சமுகத்தில் விழுந்து கிடக்கிறீர்களா? அப்படிச் செய்தால் ஜெபத்தினால் மேன்மையான விளைவுகள் ஏற்படுவதை உங்களுடைய அனுபவத்திலே நீங்கள் நிச்சயமாக கண்டுகொள்ளுவீர்கள்.

நினைவிற்கு:- “ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (யோவேல் 2:12).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.