AppamAppam - Tamil

Nov 13 – சீர்கேட்டின் மலை!

“யோசியா ராஜாவின் நாட்களிலே கர்த்தர் என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான சகல மலையின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம் பண்ணினாள்” (எரே. 3:6).

மேலே சொன்ன வசனத்தைப் பாருங்கள். அங்கே ஒரு மலையைப் பார்க்கிறீர்கள். அது என்ன மலை? அதுதான் விபச்சாரத்தின் ஆவி, வேசித்தனத்தின் ஆவி. அநேக குடும்பங்களில் இந்த ஆவி ஒரு மலையைப் போலக் காணப்படுகிறது. இந்த ஆவியினால் பீடிக்கப்பட்டு அநேகர் சோர்ந்துபோய் இருக்கிறார்கள். பல குடும்பங்கள் இந்த அசுத்த ஆவியினால் பாதிக்கப்பட்டுள்ளன.

பல குடும்பங்களில் கணவர்மார் மனைவிமாரைக் குறித்தும், மனைவிமார் கணவர்மாரைக் குறித்தும் இது குறித்து குற்றம் சாட்டுகிறார்கள். இது எத்தனை பரிதாபமானது! சாத்தான் உலக சிற்றின்பங்களைக் கொண்டு வந்து ஜனங்களை வஞ்சித்து இழுத்துச் செல்லுகிறான். பல வேளைகளில் விசுவாசிகளால் விபச்சார ஆவிகளோடு எதிர்த்து போராட முடிவதில்லை. இச்சைகளைப் போராடி மேற்கொள்ள முடியவில்லையே, விசுவாசத்திலிருந்து பின்வாங்கிவிடுவேனோ மனச்சாட்சி வாதிக்கிறதே, தாங்க முடியவில்லையே என்றெல்லாம் அவர்கள் சொல்லி கலங்குகிறார்கள்.

தேவனுடைய பிள்ளைகள் இந்த துன்மார்க்க இச்சைகளுக்கும், இரகசிய பாவங்களுக்கும் விலகி ஓட வேண்டும். உண்மைதான், இந்த விபச்சார மலை ஆவிக்குரிய ஜீவியத்திற்கு பெரிய தடையைக் கொண்டு வருகிற மலை. அன்றைக்கு இஸ்ரவேல் ஜனங்கள் இந்த விபச்சார ஆவியினால் பீடிக்கப்பட்டு பின்வாங்கி போய்விட்டார்கள். தவறான அன்பையும், பொல்லாத இன்பங்களையும், கூடாத சிநேகங்களையும் அவர்கள் தெரிந்து கொண்டார்கள்.

தேவபிள்ளைகளே, ஒருவேளை நீங்கள் அசுத்த ஆவியினால் பீடிக்கப்பட்டிருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாய் வழி விலகி போய்க் கொண்டிருக்கலாம். இந்த தவறான நட்புறவை என்னால் விடமுடியவில்லை. இந்த உலக சந்தோஷமாகிய இன்பத்தை கைவிடமுடியவில்லையே என்று சொல்லி நீங்கள் தவிக்கலாம். மேலும் மேலும் நீங்கள் அதற்குள்ளே சென்று, வெளியே வர முடியாதபடி அங்கலாய்க்கலாம்.

நீங்கள் விசுவாசத்தோடு அந்த மலையைப் பார்த்து, இயேசுவின் நாமத்தினால் கடிந்துகொள்ளுங்கள். தேவபிள்ளைகளுடைய ஐக்கியத்தை நாடி தேடி ஓடுங்கள். ஆவிக்குரிய கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள். கர்த்தர் நிச்சயமாகவே தப்புவிக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார். கடலையும் காற்றையும் அதட்டி நிறுத்தின கர்த்தர், உங்களுடைய வாழ்க்கையிலே வருகிற இந்த துன்மார்க்கமான மலைகளை பெயர்த்து கடலில் தள்ளுவார். இன்றைக்கே அவைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள். அந்த மலை பாதாள சமுத்திரத்திலே தள்ளுண்டு போகட்டும். தேவனுக்கு பிரியமற்ற உறவுகளை உங்களை விட்டு உதறித்தள்ளுங்கள்.

தேவபிள்ளைகளே, பாம்பு கையில் ஏறும்போது அதை உதறித் தள்ள எப்படி கையை உதறுவீர்களோ, அப்படியே பாவ இச்சைகளை, தகாத உறவுகளை உதறித் தள்ளுங்கள். பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ளுங்கள். ஒருபோதும் பின்வாங்கிப் போய் விடாதீர்கள்.

நினைவிற்கு:- “நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்” (சங். 51:7).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.