AppamAppam - Tamil

Nov 9 – யுத்த நாள்!

“யுத்தநாள் வந்தபோது, சவுலுக்கும் அவன் குமாரனாகிய யோனத்தானுக்குமேயன்றி, சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற ஜனங்களில் ஒருவர் கையிலும் பட்டயமும் ஈட்டியும் இல்லாதிருந்தது” (1 சாமு. 13:22).

 தேவ ஜனங்களாகிய யுத்த வீரர்கள் பட்டயமுமில்லாமல், ஈட்டியுமில்லாமல் வெறும் கையோடு யுத்தத்திற்கு புறப்பட்டு வந்தார்கள். ஈட்டியும், பட்டயமுமில்லாமல் வெறும் கையினால் எப்படி யுத்தம் செய்ய முடியும்? ஆனால், தேவ ஜனங்களோ தீர்மானத்தோடு கர்த்தரிலே சார்ந்துகொண்டு யுத்தம் செய்ய தீர்மானித்தார்கள்.

மத்திய பிரதேசத்தில் இந்தூர் என்ற ஒரு பட்டணத்தில் ஒரு கத்தோலிக்க திருச்சபை இருந்தது. அதிலிருந்த ஒரு போதகருக்கு விரோதமாகவும், அந்த ஆலயத்திற்கு விரோதமாகவும் எதிர்ப்பு இயக்கத்தினர் ஏறக்குறைய ஆயிரம் பேர் அந்த ஊழியத்தை அழித்துவிடும்படி எழும்பி வந்தார்கள். குறிப்பிட்ட நாளில் அந்த ஆலய வளாகம் முழுவதையும் தீயினால் கொளுத்திவிட சபதம் எடுத்தார்கள்.

அதைக்குறித்து கேள்விப்பட்ட ஒருவர் அந்த கத்தோலிக்க போதகரண்டை ஓடி வந்து ‘ஐயா, தற்போது பார்லிமெண்டிலே மந்திரியாயிருக்கிற கிறிஸ்தவரான ஸ்டீபனுக்கு தந்தி கொடுங்கள். அவர் மனம் இரங்கி ஏதாவது உதவி செய்யக்கூடும்’ என்று சொன்னார். ஆனால் அந்த போதகரோ, ‘எந்த மந்திரியையும் பார்க்கவேண்டாம். நாம் ஜெபிப்போம். கர்த்தரில் சார்ந்துகொள்ளுவோம். கர்த்தர் நமக்காக யுத்தம் செய்வார்’ என்றார். இதைக்கேட்ட மற்றவர்கள் வியந்தார்கள்.

குறிப்பிட்ட நாளில் ஆயிரம் பேர் தீப்பந்தங்களோடும், கம்புகளோடும், தடிகளோடும் ஆலய சுற்றுச்சுவரை நெருங்கும்போது திடீரென்று அடைமழை பிடித்தது. தீவட்டிகள் அணைந்தன. அவர்களுக்குள்ளேயே வாக்குவாதமும், சண்டையும் வந்தன. அணைந்த தீப்பந்தங்களால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டார்கள், கர்த்தர் அவர்களுக்குள்ளே பெரிய அழிவைக் கொண்டு வந்தார்.

‘கர்த்தர் உங்களுக்காய் யுத்தம் செய்வார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள்’ என்பது எத்தனை பெரிய உண்மை! அதை அனுபவித்து பார்க்கும்போதுதான் அதிலுள்ள மேன்மை மகிமையெல்லாம் உங்களுக்குப் புரியும். தாவீதின் வாழ்க்கையிலே அவர் கோலியாத்தை எப்படிப்பட்ட சூழ்நிலையில் சந்திக்க செய்தார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். கோலியாத்தை பார்த்து தாவீது “கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார்” என்று தைரியமாய் முழங்கினான் (1 சாமு. 17:47).

பட்டயத்தைப் பயன்படுத்துவது தாவீதுக்கு பழக்கமில்லை என்றாலும், விலையேறப்பெற்ற விசுவாசம் ஒன்று அவருக்குள் இருந்தது. கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் என்கிற நம்பிக்கையும் மனஉறுதியும் இருந்தன. ஆகவே கர்த்தர் தாவீதின் விசுவாசத்தை கனப்படுத்தினார். கோலியாத்தை அவன் பாதங்களுக்கு கீழ்ப்படுத்தினார்.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார்.

நினைவிற்கு:- “…நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே” (2 நாளா. 32:8).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.