No products in the cart.
மே 04 – ஜெயிப்போம்!
“நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம்” (எண். 13:30).
விசுவாசமுள்ளவன் வெற்றியை சிந்திக்கிறான். தேவன் பேரில் நம்பிக்கையுள்ளவன் தைரியமாய் ஜெயத்தை நோக்கி நடக்கிறான். ஜெபிக்கிறவன் மலைகளுக்கு கட்டளை கொடுத்து அதை கடலில்போய் விழும்படி செய்கிறான்.
கானானை வேவுபார்க்கும்படி மோசே அனுப்பிய பன்னிரண்டு பிரதானிகளிலே பத்துபேர் தோல்வியைக்குறித்தே சிந்தித்தார்கள். அவர்கள் அங்கிருந்த இராட்சதர்களைப் பார்த்தார்களே தவிர, வானத்திலும் பூமியிலும் பெரியவராகிய கர்த்தரைக் காணவில்லை. ஆனால் யோசுவாவும், காலேபுமோ கானானைப் பார்க்கும்போது அதை ஜெயங்கொள்ளுகிற தேசமாகக் கண்டார்கள். அவர்களுக்குள் இருந்த விசுவாசமும், தேவபக்தியும் அப்படி காணும்படிச் செய்தது.
இன்றும் கிறிஸ்தவர்களுக்குள்ளே இரண்டு வகையான கூட்டத்தாரைப் பார்க்கிறோம். ஒருகூட்டத்தார், சாத்தானின் வல்லமையை எண்ணி பயந்து நடுங்குகிறார்கள். மறுகூட்டத்தாரோ, இயேசுவை நோக்கிப்பார்த்து ஜெயத்தை முழங்குபவர்கள். இரண்டு அல்லது மூன்று யுத்தங்கள் இஸ்ரவேலருக்கு விரோதமாய் நடந்தன. இஸ்ரவேலருக்கு விரோதமாக பதின்மூன்று அரேபிய தேசங்கள் ஒருமுகமாய் யுத்தத்திற்கு புறப்பட்டு வந்தன. இஸ்ரவேலர் ஜனத்தொகையோ அறுபது இலட்சம்தான். ஆனால் சூழ இருக்கும் விரோதிகளின் இலக்கமோ பதிமூன்று கோடியாக இருந்தது. சிந்தித்துப்பாருங்கள். அறுபது இலட்சம் எங்கே? பதிமூன்று கோடி எங்கே? ஆனாலும் இஸ்ரவேலர் ஜெயத்தையே சிந்தித்தார்கள். ஜெயத்தையே பேசினார்கள். அப்படியே ஜெயங்கொண்டார்கள்.
இன்றுகூட ஒரு கூட்ட மக்கள் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ முடியாத ஒன்று என்றும், கடைசிவரை நிலைநிற்பது அபூர்வம் என்றும், ஆத்துமாக்களைக் கர்த்தரிடத்தில் கொண்டுவருவது கடினமான காரியம் என்றும் பேசுகிறார்கள். மறுபக்கத்திலோ கர்த்தருடைய நாமத்தினால் ஜெயங்கொள்ளுவோம் என்றும், இந்தியாவில் எழுப்புதலை உண்டாக்குவோம் என்றும், இந்தியாவை கர்த்தருக்கென்று ஆதாயமாக்குவோம் என்றும் விசுவாசிகள் முழங்குகிறார்கள். நீங்கள் எந்தக் கூட்டத்தில் இருக்கிறீர்கள்?
அன்றைக்கு கானானை வேவு பார்த்துவிட்டு துர்ச்செய்தியை பரப்பினவர்கள்தான் பெரிய எண்ணிக்கையில் இருந்தார்கள். பன்னிரண்டுபேரில் பத்துபேர் துர்ச்செய்தியைப் பரப்புகிறவர்கள் அல்லவா? தேவபிள்ளைகளே, கர்த்தருடைய நாமத்தினால் அரிய பெரிய காரியங்களைச் சாதிப்போம் என்று சொல்லுகிற தேவ மனுஷர்களோடும், தைரியமாயிருக்கிற பரிசுத்தவான்களோடும், ஜெயக்கெம்பீரமாய் முழங்குகிற தேவபிள்ளைகளோடும், இயேசுவே பெரியவர் அவர் இன்றும் ஜீவிக்கிறார் என்று சாட்சியிடுகிறவர்களோடும் நெருங்கிய உறவு வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் அசைக்கப்படுவதில்லை.
எருசலேமின் மதில்களைக் கட்ட நெகேமியா எழும்பும்போது அவனைச் சோர்ந்துபோகப்பண்ண ஒரு கூட்ட ஜனங்கள் இருந்தார்கள். அதே நேரத்தில் அவனை உற்சாகப்படுத்தி, ஒரு கையிலே பட்டயத்தை ஏந்தி, மறுகையிலே மதிலைக் கட்டுகிறவர்களாக கர்த்தரை நேசிக்கிறவர்களும் இருந்தார்கள். கர்த்தருடைய தீர்மானத்தின்படியே மதில் கட்டப்பட்டு தீர்ந்தது. இன்றைக்கு கர்த்தருடைய இராஜ்யம் கட்டப்பட்டு எழும்பிக்கொண்டிருக்கிறது. தேவபிள்ளைகளே, உற்சாகத்தோடுகூட எழும்புகிறவர்கள் பக்கத்தில் நீங்கள் நிற்கிறீர்களா? அல்லது முறுமுறுக்கிறவர்கள் பட்சத்திலிருக்கிறீர்களா?
நினைவிற்கு:- “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (1 கொரி. 15:57).
