AppamAppam - Tamil

அக்டோபர் 02 – விதைப்பும், அறுப்பும்!

“பூமியிலுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்” (ஆதி. 8:22).

விதைப்பும், அறுப்பும் ஒழிவதில்லை. இது தேவனுடைய நியமம். மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது பழமொழி. ஒரு சில விதைப்பையும் அறுப்பையும் குறித்து வேதம் என்ன கூறுகிறது என்பதைக் குறித்து தியானிப்போம்.

வேதம் சொல்லுகிறது, “நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்” (யோபு 4:8). “மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது” (ஆதி. 9:6).

“குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்” (சங். 7:15). “தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்” (கலா. 6:8).

நீங்கள் எப்போதும் நல்ல விதைகளையே விதையுங்கள். ஆசீர்வாதமான விதைகளையே விதையுங்கள். நித்தியத்திற்காக விதையுங்கள். வேதம் சொல்லுகிறது, “உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்” (பிர. 11:1).

ஒரு ராஜா பவனி வரும்போது, வயதில் மிகுந்த முதியவர் ஒருவர் ஒரு மாங்கன்றை தரையில் நட்டு தண்ணீர் ஊற்றுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். “பெரியவரே, இந்தச் செடி வளர்ந்து, மரமாகி, கனிதரும் காலம்வரை நீர் உயிரோடு இருக்கமாட்டீரே. பின் ஏன் மரத்தை நட்டுக் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த பெரியவர், “ராஜாவே, அதோ நிற்கிற மரங்களையெல்லாம் பாருங்கள். அவைகளையெல்லாம் நான் நடவில்லை. என் மூதாதையர்கள் ஊன்றின விதையின் பலனை இன்று நான் அனுபவிக்கிறேன். அதுபோலவே, இன்று நான் நடும் செடியின் பலனை நான் அனுபவிக்காமற்போனாலும், என் பின்சந்ததியார் அனுபவிப்பார்களே” என்றார். அந்தப் பதில் ராஜாவை அகமகிழ வைத்தது.

வயது முதிர்ந்த காலத்தில் ஆபிரகாம் விசுவாச விதையை ஊன்றினார். அவர் பார்த்தது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட சந்ததியில் ஒரே ஒரு மகனாகிய ஈசாக்கை மட்டும்தான். எனினும் அவரது விசுவாசக் கண்கள் வானத்து நட்சத்திரங்களைப் போன்ற சந்ததியையும், கடற்கரை மணலத்தனையான சந்ததியையும் கண்டு பூரித்தன. அந்தச் சந்ததியில்தான் நாமும் ஆபிரகாமுக்குள்ளும் கிறிஸ்துவுக்குள்ளும் ஆசீர்வாதமுள்ளவர்களாக இருக்கிறோம்.

இன்று நீங்கள் விதைக்கும் விதைகளின் பலனை, உங்கள் மாம்சக் கண்களினால் காணக்கூடாமலிருந்தாலும் நிச்சயமாக, அநேக நாட்களுக்குப் பின்பு பரலோக ராஜ்யத்தில் காண்பீர்கள். தேவபிள்ளைகளே, நீங்கள் சோர்ந்து போகாதீர்கள். “பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறதே” (மத். 13:31).

நினைவிற்கு:- “நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது” (யாக். 3:18).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.