AppamAppam - Tamil

ஏப்ரல் 07 – சிலுவையின் மேன்மை!

“…சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக” (கலா. 6:14).

அப்போஸ்தலனாகிய பவுல், புகழ்பெற்ற தத்துவ ஞானியாகிய கமாலியேலின் பாதபடியிலே கற்றவர். அவர் இஸ்ரவேல் வம்சத்தில் பிறந்தவர், பென்யமீன் கோத்திரத்தார். நியாயப்பிரமாணத்தில் தேறினவர். பரிசேயனும், வேதபாரகருமாய் இருந்தவர். பக்தி வைராக்கியமுள்ளவர். ஆனாலும் இவை குறித்தெல்லாம் அவர் மேன்மை பாராட்டாமல், சிலுவையே என்னுடைய மேன்மை என்று முழங்கினார்.

முதலாவது, சிலுவை தெய்வீகத்தின் பரிபூரணத்தை வெளிப்படுத்துகிற இடமாகும். அங்கே தேவனுடைய அன்பின் பூரணத்தையும், தியாகத்தின் பூரணத்தையும் காண்கிறீர்கள். உங்களுக்காக அடிமையின் ரூபமெடுத்த இயேசுகிறிஸ்துவின் தாழ்மையின் பூரணத்தையும் காண்கிறீர்கள். பரலோக வாசலின் வழியும், சத்தியமும், ஜீவனுமானவரைக் காண்கிறீர்கள் (யோவான் 14:6).

சில ஆண்டுகளுக்கு முன்பு நிக்கோலஸ் (Nicholas) என்று சொல்லப்பட்ட ரஷ்யா விண்வெளி வீரன் வானமண்டலத்திலே சுற்றி சில நாட்கள் ஆராய்ச்சி செய்துவிட்டு பூமிக்கு திரும்பினான். பின்னர், கிறிஸ்தவ மார்க்கத்தைக் குறித்து மிகவும் கேவலமாக வர்ணித்து, ‘நான் வானமண்டலத்திற்கு சென்று வந்தேன், அங்கே கிறிஸ்துவைக் காணோம். கடவுள் இல்லை, இல்லவே இல்லை’ என்றான். இது எல்லா பத்திரிக்கைகளிலும் செய்தியாக வெளி வந்தது.

அதை வாசித்த பில்லிகிரஹாம் அதற்கு பதில் சொல்ல விரும்பினார். ஆகவே அடுத்த நாள் பத்திரிகையிலே சிறுகதை ஒன்றை எழுதினார். ஒரு மரத்தின், அடியிலே சிறிய மண்புழு மண்ணுக்கு வெளியே தன் தலையை நீட்டி சுற்றிப் பார்த்துவிட்டு, கீழேப்போய் ‘நான் பூமியின் நான்கு திசைகளிலும் எட்டிப்பார்த்தேன். மனிதன் இல்லை, உலகில் மனிதர்களே இல்லை’ என்று தன் குடும்பத்தினரிடம் கூறினதாம். இதை எழுதிவிட்டு தொடர்ந்து, “விண்வெளி வீரனே, நீ கிறிஸ்துவைக் காண வேண்டுமென்றால் சிலுவையண்டை வா. அங்கே நீ தெய்வத்துவத்தின் பரிபூரணத்தைக் காணலாம்” என்று எழுதினார்.

இரண்டாவது, சிலுவையானது, பாவங்கள் மன்னிக்கப்படுகிற ஒரு பலிபீடமாகும். அங்கே பாவ நிவாரண பலியாக தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை நமக்காக பலியாக்கி, பாவ மன்னிப்பாகிய மீட்பை உண்டுபண்ணினார். யார், யார் சிலுவையண்டை வந்து பாவங்களை மன்னிக்கக்கோரிக் கதறுகிறார்களோ, அவர்களுக்கு மனதுருகி பாவங்களை மன்னிக்கிறார்.

மூன்றாவது, சிலுவை என்பது சாபங்கள் முறிக்கப்படும் ஒரு இடம். சாபத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பது நாளுக்கு நாள் துயரத்தையும் துன்பத்தையும்தான் கொண்டு வரும். தேவபிள்ளைகளே, சிலுவையில் உங்களுக்காக சாபமான இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்த்து, உங்கள் சாபங்கள் முறிக்கப்படும்படி கதறுவீர்களாக. அப்பொழுது சாபங்களை நீக்குகிற கர்த்தர், உங்கள்மேல் அன்புகூர்ந்து சாபத்தோடும், வேதனையோடும் வாழ்ந்த வருஷங்களுக்குத்தக்கதாக ஆசீர்வாதத்தின் நாட்களை உங்களுக்குத் தந்தருளுவார்.

நினைவிற்கு:- “இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்” (வெளி. 22:3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.