AppamAppam - Tamil

ஜூலை 8 – எலியாவின் உண்மை!

“அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள்” (1 இராஜா. 17:24).

சிலர் தங்களைக் குறித்து தாங்களே சாட்சி கொடுக்கிறார்கள். சிலரைக் குறித்து மற்றவர்கள் சாட்சி கொடுக்கிறார்கள். ஆனால் சிலரைக் குறித்தோ கர்த்தரே சாட்சி கொடுக்கிறார். எலியாவின் உண்மையைக் குறித்து மற்றவர்களும் சாட்சி கொடுத்தார்கள். கர்த்தரும் சாட்சி கொடுத்தார். புறஜாதி ஸ்திரீயான சாறிபாத் விதவை எலியாவின் உண்மையைக் குறித்து சாட்சி கொடுத்தாள். “நீர் தேவனுடைய மனுஷன்” என்பது அவளுடைய முதலாவது சாட்சி. “உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தருடைய வார்த்தை உண்மை” என்பது அடுத்த சாட்சி.

உங்களைக் குறித்து மற்றவர்கள் என்ன சாட்சி கொடுக்கிறார்கள்? நீங்கள் இரண்டு கண்களால் மற்றவர்களைப் பார்க்கிறீர்கள். ஆனால் மற்றவர்களோ ஆயிரம் கண்களால் உங்களைப் பார்க்கிறார்கள். அப்படி உங்களைப் பார்க்கும்போது நீங்கள் தேவனுடைய மனுஷராகக் காணப்படுகிறீர்களா? உங்களுடைய வாயிலிருந்து பிறக்கும் வார்த்தைகள் கர்த்தருடைய வார்த்தைகள் என்றும், அவைகள் உண்மையான வார்த்தைகள் என்றும் சாட்சி பகருகிறார்களா?

எலியாவின் உண்மை என்ன? அவர் தேவனுடைய மனுஷன் என்பதே, தேவனுக்கு முன்பாக நிற்கிறவர் என்பதே அந்த உண்மை. எலியா நம்மைப்போல பாடுள்ள ஒரு மனுஷன்தான். ஆனால் அவர் தேவனைப் பின்பற்றும்போது ஒவ்வொரு காரியத்திலும் உண்மையாயிருக்க தீர்மானித்தார். ஒவ்வொருநாளும் அதிகாலை வேளையிலே தேவசமூகத்திலே கர்த்தருக்கு முன்பாக நிற்க ஆரம்பித்தார்.

அவர் முதல் முறையாக ஆகாப் முன்பாக சொல்லுகிற வார்த்தையை கவனித்துப் பாருங்கள். “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்” என்றார் (1 இரா. 17:1). “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான்” அதுதான் அவருடைய அறிமுகம். அதுதான் அவருடைய மேன்மை. அதுதான் அவருடைய வல்லமையின் இரகசியம். அதுதான் அவருடைய உண்மை!

தேவனுக்கு முன்பாக ஒவ்வொருநாளும் எலியா நின்றபடியினால் ராஜாவாகிய ஆகாபுக்கு முன்பாக நிற்க பயப்படவில்லை. ‘நான் வானத்தை அடைத்திருக்கிறேன். என் வாக்கின்படியே அன்றி மழை பொழியாது’ என்று திட்டமாய்க் கூறும் விசுவாசம் அவர் தேவனுக்கு முன்பாக உண்மையாக நின்றதின் பலனாக ஏற்பட்டது. நீங்கள் அனுதினமும் அதிகாலையில் கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஸ்தோத்திரத்தோடு நிற்பீர்களானால், கர்த்தர் உங்களை அதிகமதிகமாய் உயர்த்துவார். நீங்கள் வைத்தியர்களிடமோ, வக்கீல்களிடமோ கைகட்டி நிற்கும் நிர்ப்பந்தம் ஒருநாளும் வரவே வராது.

எலிசாவும்கூட அதே வார்த்தைகளைத்தான் தன்னைப் பற்றி கூறுகிறார். “சேனைகளுடைய கர்த்தருக்கு முன்நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்” (2 இராஜா. 3:14). காபிரியேல் தூதன் தன்னைப் பற்றிச் சொல்லும்போது, நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன் (லூக். 1:19) என்று பெருமிதமாக சொல்லுகிறார். தேவபிள்ளைகளே, எலியாவின் உண்மை அதுதான். எலிசாவின் வெற்றியின் காரணம் அதுதான். காபிரியேலின் பெருமையும் அதுதான். நீங்களும் கர்த்தருக்கு முன்பாக உண்மையும் உத்தமமுமாய் நிற்பீர்களா?

நினைவிற்கு:- “என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாய் வசனிக்கும்” (யோபு 33:3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.