AppamAppam - Tamil

ஜூலை 10 – நன்மைகள் குறைவுபடாது!

“சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது” (சங். 34:10).

நன்மை செய்கிற இயேசு உடனிருக்கும்போது தேவனுடைய பிள்ளைகளுக்கு ஒரு நன்மையுங் குறைவுபடக்கூடாது. “ஒரு நன்மையுங் குறைவுபடாது” என்று சொல்லுகிற சங்கீதக்காரன் அதை உங்களுக்கு விளக்கிக் காண்பிப்பதற்காக சிங்கத்தையும், அதன் குட்டிகளையும் காண்பிக்கிறார். சிங்கக் குட்டிகளுக்கு தேவையான ஒரே நன்மை உணவுதான். தாய் சிங்கமும், தகப்பன் சிங்கமும், உணவைக் கொண்டுவர அதை அவைகள் உண்டு “கொழு கொழு” என்று வளரும்.

சிங்கம் காட்டுக்கெல்லாம் ராஜா. அது ஒருபோதும் பின்னடையாது. அதை எதிர்த்து எந்த விலங்கும் போரிட்டு ஜெயிக்கவும் முடியாது. அது வேகமானது, வலிமையானது, ஜெயங்கொள்ளக்கூடியது. சில வேளைகளில் அப்படிப்பட்ட சிங்கங்களே தங்கள் குட்டிகளுக்கு உணவைக் கொடுக்க முடியாமல் தவித்துவிடும். அந்த வேளைகளில் எல்லாம் சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்.

ஆனால் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பாருங்கள்! அவரும் ஒரு “சிங்கம்” தான். அவர் யூதராஜ சிங்கம். அவர் தம்முடைய பிள்ளைகளுக்கு எல்லா நன்மைகளையும் செய்கிறவர். அவரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது.

என்னுடைய தகப்பனார் சென்னை பட்டணத்திலே ஏறக்குறைய ஓராண்டு காலம் வேலையில்லாது தவித்தார். சென்னை பட்டணத்தின் பெரிய பெரிய வீதிகளின் வழியாக நடந்து, “ஆண்டவரே இந்த பட்டணத்தில் எவ்வளவோ புறஜாதியார் நல்ல வேலையில் இருக்கிறார்கள். உம்மை அறியாதவர்களும்கூட உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறார்கள். ஏன் நீர் எனக்கு ஒரு நல்ல வேலையைத் தரக் கூடாது? ஏன் என்னை உயர்த்தக்கூடாது?” என்று கண்ணீருடன் ஜெபித்தார். அப்போது கர்த்தர் இந்த வசனத்தை (சங்கீதம் 34:10) அவருக்கு ஞாபகப்படுத்தினார்.

யாருக்கு, ஒரு நன்மையுங் குறைவுபடாது? அவரைத் தேடுகிறவர்களுக்குத்தான் ஒரு நன்மையுங் குறைவுபடாது என்று எழுதியிருக்கிறது. ஆகவே அவர் கர்த்தரை உபவாசத்துடனும் ஜெபத்துடனும் தேட ஆரம்பித்தார். கர்த்தர் அவர்கள் ஜெபத்தைக் கேட்டு நல்ல வேலையைக் கொடுத்தார். அவர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாக அவர்களை உயர்த்தி ஆசீர்வதித்தார்.

கர்த்தரைத் தேடுவதற்கு உங்கள் இருதயத்தைத் திருப்புவீர்களா? முதலாவது, அவருடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுவீர்களா? அவருடைய பொன் முகத்தை பார்க்க வேண்டும். அவருடைய மெல்லிய சத்தத்தைக் கேட்க வேண்டும் என்ற ஆவல் கொள்ளுவீர்களா? உங்களுக்கு கர்த்தர் ஒரு வாக்கைக் கொடுக்கிறார். “இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்” (சகரி 9:12).

நம்முடைய தேவன் நன்மை தரும் தேவன். கர்த்தர் தரும் நன்மை என்று சொல்லும்போது வெறும் உலகப்பிரகாரமான ஆசீர்வாதம் மட்டுமே என்று எண்ணி விடாதிருங்கள். கர்த்தர் தருகிற சிறந்த நன்மைகளில் ஒன்று இரட்சிப்பு. அதுபோலவே பரிசுத்த ஆவியாகிய நன்மைகளையும் கர்த்தர் உங்களுக்குத் தந்தருளுவார்.

நினைவிற்கு:- “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” (மத் 7:11).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.