AppamAppam - Tamil

ஜூன் 24 – நல்ல தீர்மானம் – அர்ப்பணிப்பு!

“தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்ச ரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டான்” (தானி. 1:8).

கிறிஸ்தவ வாழ்க்கையிலே, தீர்மானம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை மிகவும் அவசியம். உறுதியான தீர்மானம் இல்லாவிட்டால், பரிசுத்த வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது. அர்ப்பணிப்பின் வாழ்க்கை இல்லாவிட்டால், போராட்ட நேரங்களில் உள்ளம் சலனப்பட்டு போய்விடும்.

இன்று பல வகையான பொருத்தனைகளையும், தீர்மானங்களையும் காண முடிகிறது. நாற்பது நாட்கள் மாம்சம் புசிப்பதில்லை என்றும், தலையில் பூ சூடுவதில்லை என்றும், காலையில் வேதம் வாசித்து ஜெபிப்போம் என்றும் சிலர் லெந்து நாட்களில் தீர்மானிப்பார்கள். நல்லதுதான். அப்படி நேர்ந்துகொண்டதை எப்படியாகிலும் நிறைவேற்ற வேண்டும் (பிர. 5:5).

நாட்களை விசேஷித்துக் கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்ளுகிறான். ஆனால் உங்களுடைய அர்ப்பணிப்பும், பிரதிஷ்டையும் சில நாட்களோடு நின்று போய் விடக்கூடாது. பரிசுத்த ஜீவியத்திற்கு ஆழமான பிரதிஷ்டையும் வாழ்நாள் முழுவதும் மேற்கொள்ளுகிறதாய் இருக்கவேண்டும்.

பழைய ஏற்பாட்டிலே, ஒரு அர்ப்பணிப்பின் வாழ்க்கையைக் கர்த்தர் தெரிந்துகொள்ளும்படி தம் பிள்ளைகளுக்குக் கொடுத்தார். அதில் ஒரு அர்ப்பணிப்பின் வாழ்க்கை நசரேய விரதமாகும். எண். 6:1-12 வரை உள்ள வசனங்களிலே, நசரேய விரதத்தின் நிபந்தனைகளைக் குறித்து சொல்லியிருக்கிறது. 1. நசரேயனுடைய தலை மயிர் கத்தரிக்கப்படக்கூடாது. 2. நசரேயன் திராட்சரசம் மதுபானம் குடிக்கக்கூடாது. 3. செத்த பிணத்தால் தீட்டுப்படக் கூடாது. இந்த நசரேய விரதத்தின் பிரதிஷ்டை கொஞ்ச நாட்களுக்குரியதல்ல. வாழ்நாள் முழுவதிற்குமுரியது.

புதிய ஏற்பாட்டிலே, இயேசு கிறிஸ்துவின் அர்ப்பணிப்பின் வாழ்க்கை நம்முடைய உள்ளத்தை ஆழமாய்த் தொடுகிறது. தான் அதை பூரணமாய் மேற்கொள்ளுவதற்காக பிதாவின் சித்தத்திற்கு தன்னை பூரணமாய் அர்ப்பணித்திருந்தார். அதற்காகவே இறங்கி வந்தேன் என்றார் (யோவான் 6:38). அவர் நாற்பது நாட்கள் உபவாசமிருந்தபோது அவருக்கு பசியெடுத்தது. ஆனாலும் அவர் கல்லை அப்பமாக்கி, தன் பசியை தீர்த்துக் கொள்ள முன் வரவில்லை.

அவரை பின்னடையச் செய்ய சாத்தான் மேற்கொண்ட தந்திரங்கள் தோல்வியிலேயே முடிந்தன. ஆம், அவருடைய அர்ப்பணிப்பின் வாழ்க்கை பரிசுத்தமுள்ள வாழ்க்கையாய் இருந்தது. அவர் பரிசுத்தமுள்ளவரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும் பாவிகளுக்கு விலகினவருமாயிருந்தார் (எபி. 7:26).

கர்த்தர் பிரதிஷ்டையையும், கட்டுப்பாடான வாழ்க்கையையும்தான் இன்றைக்கு உங்களிடத்தில் எதிர்பார்க்கிறார். பழைய ஏற்பாட்டிலே தானியேல் அப்படிப்பட்ட பிரதிஷ்டையின் ஜீவியம் செய்ததினால், கர்த்தர் தானியேலை எவ்வளவு வல்லமையாய் உயர்த்தினார்! தன் மறைபொருட்களையெல்லாம் தானியேலுக்கு வெளிப்படுத்தினார். தேவபிள்ளைகளே, நீங்களும் அர்ப்பணிப்பின் வாழ்க்கை வாழ உங்களை ஒப்புக் கொடுப்பீர்களாக.

நினைவிற்கு:- “பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்” (சங். 50:5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.