Appam - Tamil

Sep – 16 – கண்களை வைத்து!

“நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங். 32:8).

கர்த்தர் பொதுவாகவும் உங்களோடு பேசுவார். தனிப்பட்ட முறையிலும் உங்களோடு பேசுவார். வேதத்திலிருந்து அவருடைய பொதுவான ஆலோசனைகளை நீங்கள் கேட்கிறீர்கள். அதே நேரத்தில், அவருடைய மெல்லிய குரல் மூலமாய் தனிப்பட்ட ஆலோசனைகளையும் கேட்கிறீர்கள். மேலே குறிப்பிடப்பட்டிருக்கிற வசனத்தைப் பாருங்கள். “உனக்கு” “நீ” “உன்மேல்” “உனக்கு” என்று நான்கு முறை நேரிடையாக அழைப்பது தனிப்பட்ட முறையில் அவர் ஆலோசனை சொல்லி வழி நடத்துகிறதை விளக்குகிறது அல்லவா?
தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து உங்கள் மேல் தம்முடைய கண்களை வைத்து உங்களுக்கு போதிப்பார். நடக்க வேண்டிய வழியைக் காண்பிப்பார்; மட்டுமல்ல, அன்போடு ஆலோசனைகளும் கூறுவார்.
சில தாய்மார்களுக்கு கைக்குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கும். அதே நேரத்தில் வீட்டு வேலைகளையும் அவர்கள் கவனிக்க வேண்டியதிருக்கும். சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்தாலும் அவர்களுடைய கண்களோ குழந்தையின் மேலேயே நோக்கமாயிருக்கும். ஒரு பக்கம் குழந்தையை பார்த்துக் கொண்டே மறுபக்கம் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருப்பார்கள். குழந்தைகளின் நினைவுகளைவிட்டு அவர்களை பிரிக்கவே இயலாது.
நம் ஆண்டவர் நம்மீது தாயினும்மேலான அன்பினைக் கொண்டவர். ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல் தன் பாலகனை மறப்பாளோ? மறக்கவே மாட்டாள். அதைப்போல கர்த்தர் ஒருநாளும் உங்களை மறப்பதில்லை. அவர் தம்முடைய கண்களை எப்பொழுது உங்கள்மேல் வைத்து உங்களுக்கு ஆலோசனை சொல்லுகிறார்.
ஒன்றை திட்டமாய் அறிந்துகொள்ளுங்கள். எத்தகைய பிரச்சனையானாலும் சரி, எவ்வளவு பயங்கரமான சூழ்நிலையானாலும் சரி, அதற்கேற்ற சரியான ஆலோசனையைக் கர்த்தரால் தரமுடியும். “உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்ளுவீர்” (சங். 73:24) என்று தாவீது பாடுகிறார். தேவனால் ஆலோசனை தரமுடியாத அல்லது அவரால் வழிகாட்ட முடியாததுமான பிரச்சனை எதுவும் கிடையாது.
ஆகவேதான் ஞானி எழுதுகிறார்: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிளெல்லாம் அவரை நினைத்துக் கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (நீதி. 3: 5,6). நீங்கள் கர்த்தரிடத்தில் ஆலோசனைக் கேட்கமாட்டீர்களா என்று அவர் உங்களை எதிர்பார்த்த வண்ணமாகவேயிருக்கிறார். தமஸ்கு வீதியிலே, பவுல் ஆண்டவரிடம், “ஆண்டவரே, நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்” என்று கேட்டபோது கர்த்தர் “நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும்” என்றார். அவரே உங்களுக்கும் உரிய ஆலோசனை சொல்லி அருமையாய் வழி நடத்துவார்.

நினைவிற்கு :- “என் கண்கள் எப்பொழுது கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கிறது; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்” (சங். 25:15).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.