AppamAppam - Tamil

ஜூன் 20 – அதிபதிக்கு முன்பு!

“நீ ஒரு அதிபதியோடே போஜனம் பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார்” (நீதி. 23:1).

சாலொமோன் ராஜா ஞானமாய் அரசாண்ட பெரிய ராஜாவாயிருந்தார். அதிபதிகளின்  தந்திரங்களையும், அவர்கள் எப்படி மற்றவர்களை கண்ணி வைத்துப் பிடிப்பார்கள் என்பதையும் அவர் அறிந்திருந்தார். ஆகவே அவர் எழுதுகிறார், “நீ ஒரு அதிபதியோடே போஜனம் பண்ண உட்கார்ந்தால் அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே: அவைகள் கள்ள போஜனமாமே” (நீதி. 23:3).

இன்றைக்கு பெரிய செல்வந்தர்கள் அரசாங்கத்திலுள்ள அதிகாரிகளை மது, மங்கை மற்றும் பணம் ஆகியவற்றை கொண்டு தங்கள் வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.அது போல பலர் உங்களை மயக்க முன் வரலாம். உங்களுக்கு முன்பாக பல ருசியுள்ள பதார்த்தங்களை (பணம், பேர், புகழ்) வைக்கும்போது, அவை என்ன காரணத்திற்காக கொடுக்கப்படுகின்றன என்பதைக் கவனியுங்கள். சாத்தானின் தந்திரங்களை அறிந்துகொள்ளுங்கள். கண்ணிகளில் சிக்கி விடாதேயுங்கள்.

எலியைப் பிடிப்பதற்கு எலி கூண்டுக்குள் மசால் வடை வைத்து, ஆசைக் காட்டுவார்கள். மசால் வடையின் வாசனையையும், ருசியையும் விரும்பி எலி போய் மாட்டிக் கொள்ளும். இப்படித்தான் அன்றைக்கு உலக ஆசை இச்சைகளை காண்பித்து, இஸ்ரவேலின் நியாயாதிபதியாகிய சிம்சோனை, சாத்தான் கூண்டுக்குள் அடைத்து விட்டான். எத்தனை பரிதாபமான நிலை!

இயேசுகிறிஸ்து இன்னொரு அதிபதியைக் குறித்து எச்சரித்தார். அவன்தான் உலகத்தின் அதிபதி (யோவான் 14:30). இயேசு உபவாசம் பண்ணி பசியாய் இருந்தபோது, உலகத்தின் அதிபதி அவருக்கு முன்பாக போஜனத்தைக் கொண்டு வந்து வைத்தான். அது என்ன போஜனம்? வெறும் கற்கள். நீ தேவனுடைய குமாரனேயானால், இந்த கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான் (மத். 4:3). ஆனால் கர்த்தரோ அப்பாலே போ சாத்தானே என்று அவனை விரட்டினார். சோதனைகளுக்கு அவர் இடம் கொடுக்கவில்லை.

வேதம் சொல்லுகிறது, “அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே, அவைகள் கள்ள போஜனமாமே” (நீதி. 23:3). “கள்ள போஜனம்” என்பது பாவத்தைக் குறிக்கிறது. உலகத்திலே காணப்படுகிற மாம்சத்தின் இச்சைகளைக்  குறிக்கிறது. உலக மனுஷர் தன் கண்களினால் போஜனம் பண்ணுகிறார்கள். சினிமா, விபச்சாரம் ஆகியவற்றை போஜனமாக அருந்தி, பிசாசுக்கு அடிமையாக ஜீவிக்கிறார்கள்.

இயேசு கிறிஸ்துவும் ஒரு போஜனத்தைத் தருகிறார். அது நமக்குள் நித்திய ஜீவனைக் கொண்டு வருகிறது. இயேசு சொன்னார், “நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம். இந்த அப்பத்தை புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்” (யோவா. 6:51). கர்த்தருடைய வார்த்தைகளே நமக்கு அப்பங்களாய், ஆவிக்குரிய மன்னாவாயிருக்கிறது.

தேவபிள்ளைகளே, வேத வசனத்தை உணவைப்போல எண்ணி உற்சாகமாக உண்ணுவீர்களா?

நினைவிற்கு:- “உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது” (எரே. 15:16).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.