AppamAppam - Tamil

ஜூன் 6 – அன்பை அறிந்திருக்கிறோம்!

“அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” (1 யோவான் 3:16).

இயேசுகிறிஸ்து, உண்மையான அன்பை அறிமுகப்படுத்தியவர். மட்டுமல்ல, அன்புக்கு இலக்கணம் வகுத்தவர். ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை (யோவான் 15:13) என்று சொல்லி, தன்னுடைய உயிரையே நமக்காகக் கொடுத்து சிறந்த அன்பை வெளிப்படுத்தினார்.

ஒரு முறை தென்துருவ பிரதேசத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஒரு இளம் விஞ்ஞான குழுவினர், பயங்கரமான பனிமழையில் சிக்கிக்கொண்டார்கள். அந்த பனி மழையின் காரணமாக, அவர்கள் எதிர்பார்த்தபடி தங்கள் இடங்களுக்குத் திரும்பமுடியவில்லை. அவர்கள் கைகளிலிருந்த உணவு எல்லாம் தீர்ந்து போனது. ஒரு சில ரொட்டித் துண்டுகள் மாத்திரமே மீதி இருந்தன. பட்டினியினாலும், பசியினாலும், குளிரினாலும் செத்து மடிந்துவிடுவோமோ என்ற பயம் அவர்களுக்குள் ஏற்பட்டது.

அன்று இரவு அவர்கள் கூடாரத்தில் ஒரு சிறு சத்தம் கேட்டு, அந்த குழுத்தலைவர் விழித்துக் கொண்டார். அவர் கண்களை திறந்து பார்த்தபோது, அங்கே ஒரு இளைஞன் அந்த குழுவிலுள்ள வேறு ஒருவரின் பையில் தன் கைகளை மெதுவாய் இடுவதைக் கண்டார். அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “எல்லாரும் பசியோடு இருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதற்காக திருடக்கூடிய அளவில் இந்த இளம் விஞ்ஞானி இப்படி விழுந்துபோனாரே” என்று சொல்லி வேதனை அவருடைய உள்ளத்தைப் பிழிந்தது.

ஆனால் அடுத்த சில வினாடிகளில் அவருடைய உள்ளத்தில் அங்கலாய்ப்பு மாறி சந்தோஷம் நிரம்பியது. ஏன் தெரியுமா? அந்த இளம் விஞ்ஞானி மற்றவருடைய பையிலிருந்து ரொட்டித் துண்டை திருடவில்லை. மாறாக, தன் பையிலுள்ள ரொட்டித் துண்டுகளை வேறொரு இளைஞருடைய பையில் வைத்துக் கொண்டிருந்தார். தான் மரணமடைந்தாலும் பரவாயில்லை. தன் சகோதர விஞ்ஞானி பிழைத்துக்கொள்ள வேண்டும். அவன் பெலவீனம் நீங்கி பெலனடைய வேண்டும் என்பதே இந்த இளம் விஞ்ஞானியின் விருப்பமாயிருந்தது. ஒருவேளை நேரில் கொடுத்தால் அவன் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்பதற்காக இரவு தூக்கத்தில் அந்த உணவை அந்த இளம் சகோதரரின் பையில் வைத்து உதவிசெய்தான்.

கொடிய குளிர்ந்த இரவில், மிகவும் தியாகத்தோடு செய்த அந்த செயல் குளிர்ந்து கிடந்த அந்த தலைவரின் உள்ளத்தில் அனல் மூட்டி எழுப்பியது. இப்படிப்பட்ட தியாக அன்பு இருப்பதால்தான் அநேக கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்க முடிகிறது என்பதை அவர் உணர்ந்தார். எல்லா அன்புக்கும், தியாகத்துக்கும் மேலான ஒரு அன்பையும், தியாகத்தையும் நடைமுறையிலே இயேசு காண்பித்தார். அந்த அன்பின் அடையாளச் சின்னம்தான் கல்வாரிச் சிலுவை.

தேவபிள்ளைகளே, உங்கள் மீது அளவில்லாத அன்புவைத்த ஆத்தும நேசரின் ஊழியத்திற்காக உங்களை ஒப்புக் கொடுப்பீர்களா?

நினைவிற்கு:- “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:8).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.