No products in the cart.
மே 20 – ஆரோக்கியமுள்ள நாவு!
“ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்” (நீதி. 15:4).
உங்கள் உறவினர்கள் உங்களுடைய வார்த்தைகளில் கரிசனை இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். உங்கள் பிள்ளைகள் உங்களுடைய வார்த்தைகளில் அன்பு இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். உங்கள் மேலதிகாரிகள் உங்களுடைய வார்த்தைகளில் கீழ்ப்படிதலும், விசுவாசமும் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் கர்த்தரோ, உங்கள் வார்த்தைகளில் பரிசுத்தம் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்.
ஏசாயாவின் உதடுகள் அசுத்தத்தினால் நிறைந்திருந்தது. அவர் சொல்லுகிறார், “ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றான்” (ஏசா. 6:5). உடனே கர்த்தர் தம் சேராபீனை அனுப்பி பலிபீடத்தின் அக்கினி குறட்டினால் ஏசாயாவின் வாயைத் தொட்டார். அது அவருடைய பாவத்தை நீக்கி அவரை சுத்திகரித்தது மட்டுமல்லாமல், ஏசாயாவை மாபெரும் தீர்க்கதரிசியாய் உயர்த்திற்று.
புதிய ஏற்பாட்டிலே, அன்று கர்த்தர் சீஷர்களின் நாவை பரிசுத்தப்படுத்தும்படியாக மேல் வீட்டறையிலே கூடி வரச் செய்து, ஒவ்வொருவர் மேலும் அக்கினி மயமான நாவுகளை அமரப்பண்ணினார். அப்பொழுது அவர்கள் நவமான பாஷைகளைப் பேசினார்கள். மனுஷர் பாஷைகளையும், தூதர் பாஷைகளையும் பேசினார்கள். பரலோகத்தின் பரிசுத்த வார்த்தைகளை உதிர்த்தார்கள். நம்முடைய தேவன் பரிசுத்தராயிருக்கிறார். ஆகவே நீங்கள் பேசுகிற வார்த்தைகளைக் குறித்து கவனமாயிருக்க வேண்டும். இதை உணர்த்தும்படி, அன்னாள், “கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் இல்லை; இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்” என்று கூறுகிறதைக் காணலாம் (1 சாமு. 2:2,3).
ஒரு வீட்டிலே மாமியாரின் வார்த்தைகளும், மருமகளின் வார்த்தைகளும் பலிபீடத்தில் அர்ப்பணிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தால் பரலோகத்தை பூமியிலேயே அனுபவித்து விடலாம். அதைப்போல கணவன் மனைவியின் வார்த்தைகள் இனிமையுள்ளதாயிருந்தால் அந்த குடும்பம் சொர்க்கலோகம் போன்றே இருக்கும் எனலாம். குடும்பத்தின் அமைதியை கெடுப்பது வீணான வார்த்தைகளே.
ஆகவேதான் அப்.பவுல் நீங்கள் உங்களுடைய வாயை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள் என்று கூறுகிறார் (ரோமர் 6:19). உங்களுடைய நாவை பயன்படுத்த மிகச் சிறந்த வழி ஒன்று உண்டென்றால், அது நாவின் மூலமாக தேவனை துதித்துப் பாடி தேவனை ஆராதனை செய்வதாகும்.
தேவபிள்ளைகளே, உங்களுடைய நாவு கர்த்தருடைய மகிமையை அறிவிக்கட்டும். அதன் வார்த்தைகள் அநேகம் பேரை இரட்சிப்பிற்குள் வழி நடத்தட்டும். அதன் வார்த்தைகளினால் அநேகம் பேரை பாதாளத்தின் பிடியிலிருந்து விடுவித்து, பரலோக பாதைக்கு அழைத்துச் செல்லட்டும்.
நினைவிற்கு:- “உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார்” (சங். 45:2).