No products in the cart.
மே 19 – ஆளுகை நம்முடையது!
“மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்… மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடி சூட்டினீர்” (சங். 8:4,5).
கர்த்தர் மனிதனை நேசிக்கிற அளவையும், மேன்மைப்படுத்தியிருக்கிற அளவையும், உயர்த்தியிருக்கிற அளவையும், வார்த்தைகளினால் விவரிக்க முடியாது. ஆகவேதான் தாவீது ராஜா மிகவும் ஆச்சரியப்பட்டு வியந்து, “மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்? நீர் அவனைத் தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடி சூட்டினீர்” என்று எழுதுகிறார்.
நீங்கள் முடி சூட்டப்பட்டிருக்கிறீர்கள் (சங். 103:4). தேவனுக்கு முன்பாக ராஜாக்களாய் விளங்குகிறீர்கள் (வெளி. 1:6). கர்த்தர் உங்களுக்கு ஆளுகையையும், அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார். சங்கீதக்காரன் சொல்லுகிறான், “உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்” (சங். 8:6).
கிறிஸ்துவுக்குள் இருக்கிற வல்லமை, ஆளுகை, பெலன், அதிகாரம் ஆகியவற்றை உணர்ந்து கொள்ளாததினால்தான், அநேக மக்கள் பிரச்சனைகளோடும், கண்ணீரோடும், போராட்டங்களோடும், நிந்தைகளோடும், அவமானங்களோடும் வாழுகிறார்கள். எந்த ஒரு மனிதன் அதை உணர்ந்திருக்கிறானோ, அவன் ஜெயமுள்ளவனாய் வாழுவான்.
கணித பாடத்திற்கு விதிமுறைகளுண்டு. வாய்ப்பாடுகளுண்டு. சூத்திரங்களுண்டு. அதுபோலவே கிறிஸ்தவ வாழ்க்கைக்கும் விதிமுறைகளும், அதிகாரங்களும், ஆளுகைகளும் உண்டு. எந்த ஒரு மனிதன் மறுபடியும் பிறந்து தேவனுடைய பிள்ளையாய் மாறுகிறானோ, அவனுக்கு வாக்குத்தத்தங்களும் சுதந்திரங்களுமுண்டு. தேவபிள்ளைகளே, நீங்கள் அதை அறிந்து செயல்படுவீர்களென்றால், உங்களுக்கு ஈடானவர்கள் ஒருவருமில்லை. ஆம், மறுபடியும் பிறந்த கர்த்தருடைய பிள்ளைகளை கர்த்தர் அவ்வளவாய் மேன்மைப்படுத்துகிறார்.
சங்கீதக்காரன், “நீர் தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்” (சங். 8:5) என்று சொல்லுகிறான். ஆனால் சில மொழிபெயர்ப்புகளைப் பார்க்கும்போது அங்கே தேவதூதன் என்கிற வார்த்தைக்கு பதிலாக ஏலோகீம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஏலோகீம் என்பது, நம் தேவனைக் குறித்த ஒரு பெயர். எனவேதான் பின்னால் வந்த வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் இவ்வாறு மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
நம் தேவனாகிய கர்த்தர் எங்கும் நிறைந்திருப்பவர். சர்வ வல்லமையுள்ளவர். தேவபிள்ளைகளே, நீங்கள் பூமியிலே வாழும்போது, நேரமும், காலமும், வல்லமையும், செயல்திறனும் உங்களை மட்டுப்படுத்துகிறது. ஆனாலும் கர்த்தர் உங்களை மகிமையினாலும், கனத்தினாலும் முடிசூட்டியிருக்கிறார். நீங்கள் இந்த உலகத்தை விட்டு கர்த்தருடைய ராஜ்யத்திற்கு செல்லும்போது, பூரண மகிமையை சுதந்தரித்துக் கொள்ளுவீர்கள்.
நினைவிற்கு:- “ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் (சங். 8:8).