AppamAppam - Tamil

மே 17 – ஆசீர்வாதம் வேண்டும்!

“எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்” (நியா.1:15).

‘எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்’. இப்படித்தான் அநேக உள்ளங்கள் ஏங்குகின்றன; எதிர்பார்க்கின்றன. அன்று அக்சாள் தன் தகப்பனாகிய காலேபிடம் எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டுமென்று கேட்டாள். இன்று நீங்கள் உங்களுடைய பரம தகப்பனாகிய தேவனிடம், “ஆண்டவரே, இம்மைக்குரிய ஆசீர்வாதங்களினாலும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களினாலும், நித்தியத்திற்குரிய ஆசீர்வாதங்களினாலும் என்னை ஆசீர்வதியும்” என்று கேட்பீர்களா?

“கேளுங்கள்; தரப்படும்” என்று அவர் வாக்களித்திருக்கிறார். கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான். அநேகம்பேர் கர்த்தரிடத்திலே முழங்கால் படியிட்டு கேட்காததினால்தான் பெற்றுக்கொள்ளுகிறதில்லை. சிறு தேவையாயிருந்தாலும் சரி, பெரிய தேவையாயிருந்தாலும் சரி, அதை கர்த்தரிடத்தில் கேளுங்கள். நிச்சயமாகவே நீங்கள் நினைக்கிறதற்கும், வேண்டிக்கொள்ளுகிறதற்கும் மேலாக அவர் உங்களை ஆசீர்வதித்தருளுவார்.

அக்சாளுக்கு தகப்பனாகிய காலேப் வறட்சியான நிலங்களை முன்பு கொடுத்திருந்தார். வறட்சியான நிலத்தினால் ஒரு பிரயோஜனமுமில்லை. தகப்பன் தனக்கு வறட்சியான நிலத்தை தந்துவிட்டாரே என்று அவள் ஒருவேளை மனம் கசந்து இருந்திருக்கக்கூடும். அந்த கசப்பை அவள் தன் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்து குமுறிக்கொண்டிருக்கவில்லை.

அவள் தன் மனதுருக்கத்தின் தகப்பனை அறிந்திருந்தாள். தன் தகப்பனிடம் நீர்ப்பாய்ச்சலான நிலங்களை கேட்கும்போது, அவர் தனக்கு அப்படியே தந்தருளுவார் என்று விசுவாசித்தாள். அந்த விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் அவள் தகப்பனிடத்தில் கேட்டபோது, காலேப் மனதுருகி அவள் வேண்டிக்கொண்டதை கொடுத்தார்.

தேவபிள்ளைகளே, ஒருவேளை இன்று நீங்கள் வறட்சியான பாதையிலே நடந்து வந்து கொண்டிருக்கலாம். ‘கடன் பிரச்சனை என்னை வாட்டுகிறது. வருமானம் போதவில்லையே’ என்று தவித்துக்கொண்டிருக்கலாம். அல்லது போதுமான ஆரோக்கியம் சரீரத்திற்கு இல்லாததினால் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய முடியாமல் வறண்டு போனேனே என்று துயரத்தோடு நடைபோட்டு கொண்டிருக்கலாம். கவலைப்படாதேயுங்கள். வறண்ட நிலத்தை செழிப்பான நிலமாய் மாற்றக்கூடிய கர்த்தரை நோக்கிப் பாருங்கள். அவர் உங்கள் வறட்சியை மாற்றி செழிப்பையும், ஆசீர்வாதத்தையும் தந்தருளுவார்.

கர்த்தர் இன்று உங்களுக்கு கொடுக்கும் வாக்குத்தத்தம்: “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப் போலச் செழிக்கும். அது மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்” (ஏசா. 35:1,2). தேவபிள்ளைகளே, நம்முடைய தேவன் வனாந்தரத்தையும் செழிப்பாக்கக்கூடிய வல்லமையுள்ளவர்.

நினைவிற்கு:- “தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்” (சங்.66:12).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.