AppamAppam - Tamil

மே 16 – ஆர்ப்பரியுங்கள்!

“யோசுவா ஜனங்களை நோக்கி: ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தைக் கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார் என்றான்” (யோசுவா 6:16).

இஸ்ரவேல் ஜனங்களின் வெற்றி, ஆர்ப்பரிப்பின் துதியிலிருந்தது என்னும் வெற்றியின் ரகசியத்தை யோசுவா உங்களுக்கு கற்றுக் கொடுக்கிறார். அன்று அவர்கள் எக்காளங்களை ஊதி, எரிகோ கோட்டையைச் சுற்றி நடந்து ஆர்ப்பரித்தபோது, அது தகர்ந்து கீழே விழுந்தது. பெரிய பெரிய அலங்கங்களெல்லாம் தரைமட்டமாயின. ஆர்ப்பரிப்பின் துதியில் ஒரு பெரிய வல்லமை அடங்கியிருக்கிறது. ஒரு மனுஷன் கர்த்தரைத் துதித்து ஆர்ப்பரிக்கும்போது, முதலாவது, அவனுடைய உள்ளத்திலுள்ள காரிருளின் ஆதிக்கங்கள், இருதயத்திலுள்ள அந்தகாரச் சக்திகளின் கோட்டைகள் உடைகின்றன. துதியின் மத்தியிலே வாசம் செய்கிறவர், உள்ளத்திலே இறங்கி வருகிறபடியால் தீய துஷ்ட வல்லமைகள் விலகி ஓடுகின்றன. தேவனுடைய பிரசன்னம் உள்ளத்தை நிரப்புகிறது. அவன் உள்ளத்திலே ஜெயத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறான்.

அடுத்தது, வெளியிலே உள்ள தடைகளாகிய எரிகோக்கள் உடைகின்றன. எதிர்த்த துஷ்ட ஆமான்கள் விலகுகிறார்கள். தடைப்பட்டிருக்கிற ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. அஞ்ஞானமும், விக்கிரக ஆராதனையும் நிறைந்த அந்த புற ஜாதியாருடைய எரிகோவை மேற்கொள்ளுவதற்கு துதியின் ஆயுதமே உதவியது. நீங்களும்கூட உங்களுடைய அலுவலகத்திலும், குடும்பத்திலுமுள்ள எதிர்ப்பின் சக்திகளை மேற்கொள்ளுவதற்கு துதியின் ஆயுதத்தை பயன்படுத்துங்கள். கர்த்தர் நிச்சயமாகவே உங்களுக்கு ஜெயம் தருவார்.

ஆர்ப்பரிப்பின் துதி அதிக வல்லமையுள்ளது என்பதை தாவீது திரும்பத் திரும்ப அனுபவித்தபடியினால், உங்களுடைய துன்பங்களிலெல்லாம் நீங்களும் அதே ஆயுதத்தை கையாள வேண்டுமென்று வலியுறுத்துகிறார். அவர் சொல்லுகிறார். “சகல ஜனங்களே, கைகொட்டி, தேவனுக்கு முன்பாகக் கெம்பீர சத்தமாய் ஆர்ப்பரியுங்கள். தேவன் ஆர்ப்பரிப்போடும், கர்த்தர் எக்காளச் சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்” (சங். 47:1,5).

“பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். கர்த்தராகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்” (சங். 98:4,6). புதிய ஏற்பாட்டிலும்கூட இப்படிப்பட்ட மேன்மையான வெற்றியை பவுலும் சீலாவும் தங்களுடைய அனுபவத்திலிருந்து உங்களுக்குப் போதிக்கிறார்கள் அல்லவா?

அவர்கள் இருள் சூழ்ந்த சிறைச்சாலையில் போடப்பட்ட நிலைமையிலும்கூட கர்த்தரைப் பாடி துதித்தார்கள். அந்த துதியின் சத்தம் சிறைச்சாலையின் அஸ்திபாரங்களை அசைத்தது. “கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்று போயிற்று” (அப். 16:26). தேவபிள்ளைகளே, இன்று முதல் கர்த்தரைத் துதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். கர்த்தர் பெரிய விடுதலையை உங்களுக்குத் தந்தருளுவார்.

நினைவிற்கு:- “வானங்களே, களித்துப் பாடுங்கள்; கர்த்தர் இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; …கர்த்தர் யாக்கோபை மீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார்” (ஏசா.44:23).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.