AppamAppam - Tamil

மே 13 – ஆரோக்கியம் வரப்பண்ணுவார்!

“எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்” (யாத். 15:26).

“நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்” என்ற வேத பகுதியை, “நானே உன்னை குணமாக்குகிற கர்த்தர், ஆரோக்கியம் வரப்பண்ணுகிற கர்த்தர், சுகமளிக்கிற கர்த்தர்” என்றெல்லாம் பல மொழி பெயர்ப்புகள் மொழி பெயர்த்திருக்கின்றன. சில மொழிபெயர்ப்புகளில், “நானே உன் பரம வைத்தியர்” என்ற அர்த்தமும் காணப்படுகின்றன.

பிணியாளிக்கு வைத்தியன் தேவை என்பது உண்மைதான். உலகப் பிரகாரமான வைத்தியன் சரீரத்தில் வருகிற நோய்களை மாத்திரம்தான் தீர்ப்பான். ஆனால், கர்த்தரோ ஆவி, ஆத்துமா, சரீரம் அனைத்துக்கும் போதுமான வைத்தியராக இருக்கிறார். அவரால் குணமாக்கக்கூடாத வியாதிகள் ஒன்றுமில்லை. மருந்துகளுக்கு இருக்கும் வல்லமையைப் பார்க்கிலும் கர்த்தருக்கு கோடி மடங்கு வல்லமையுண்டு.

ஒரு முறை ஒரு நோயாளி, ஒரு இளம் மருத்துவரிடம் சிகிச்சைக்காக வந்தான். தன் வேதனையின் அறிகுறிகளையெல்லாம் விபரமாக வர்ணித்த போதிலும், அந்த இளம் மருத்துவரால், அது என்ன நோய் என்று கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே, அவர் தமது அறைக்குள் சென்று, தன் கல்லூரியில் படித்த புத்தகங்கள் அனைத்தையும் புரட்டிப் பார்த்தார். ஆனாலும் அவரால் அந்த நோயைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

இறுதியாக அந்த நோயாளியிடம், “ஐயா, இந்த விதமான நோய் இதற்கு முன்பு உங்களுக்கு வந்ததுண்டா?” என்று கேட்டார். அந்த நோயாளி, ஆம், வந்திருக்கிறது என்று சொன்னார். உடனே அந்த மருத்துவர், “சரி கவலைப்படவேண்டாம். அதே நோய்தான் உங்களுக்கு மீண்டும் வந்திருக்கிறது” என்று கூறி நிலைமையை சமாளித்தார். இப்படிப்பட்டவர்களை, “காரியத்துக்குதவாத வைத்தியர்கள்” (யோபு 13:4) என்று யோபு பக்தன் கூறுகிறார்.

புதிய ஏற்பாட்டிலே, பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீயை குறித்து வாசிக்கிறோம். அவளுக்கு பன்னிரண்டு வருடமாக அந்த பாடு இருந்ததென்றால், அந்த பாடு, எத்தனை கொடியதாய் இருந்திருக்கும்! சரீரமெல்லாம் இளைத்துப் போயிருக்கும். அவளைக் குறித்து வேதம் சொல்லுகிறது: “அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்பட்டாள்” (மாற்கு 5:26). முடிவாக, அவள் இயேசுவண்டை வந்தாள். “ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்று போயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள்” (மாற். 5:27-29).

தேவபிள்ளைகளே, எந்த வியாதியாக இருந்தாலும் கர்த்தர் அதை குணமாக்க வல்லமையுள்ளவர். அவர் உங்களுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னிக்கும் போது உங்கள் நோய்களையும் குணமாக்குகிறார் (சங். 103:3) என்று வேதம் சொல்லுகிறது.

நினைவிற்கு:- “நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசா. 53:5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.