No products in the cart.
மே 9 – ஆவியினால் சந்தோஷம்!
“தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது” (ரோமர் 14:17).
இரட்சிப்பிலே ஒரு சந்தோஷம் கிடைக்கிறது. அதே நேரத்தில், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் இன்னும் அதிகமான சந்தோஷம் வருகிறது. பரலோகத்தில் வாசம் பண்ணுகிற தேவாதி தேவன், பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குள் வந்து வாசம் பண்ணுவது ஒரு மகிழ்ச்சிதானே. அவர் உங்களோடு இருப்பதும், உங்களோடு பேசுவதும், உங்களை வழிநடத்துவதும் மகிழ்ச்சியின்மேல் மகிழ்ச்சியை உங்களுக்குக் கொண்டு வருகிறது.
இரண்டாவதாக, அந்த பரிசுத்த ஆவியின் மூலமாக தேவனுடைய அன்பு உங்களுடைய இருதயத்தில் ஊற்றப்படுகிறது (ரோமர் 5:5). நேசத்தின் உச்சிதங்கள் கல்வாரி அன்பை ருசிக்கும்படி செய்கின்றன. அவருடைய நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது அல்லவா? (உன். 1:2). எவ்வளவுக்கெவ்வளவு கர்த்தருடைய அன்பை ருசிக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்கள் வாழ்க்கை குதூகலமுள்ளதாய் விளங்கும்.
பரிசுத்த ஆவியின் மூலம் உங்களுக்குள் சந்தோஷம் ஏற்படுவதற்கு இன்னொரு காரணம், அதனால் உங்களுக்குள் கனிந்து வருகிற ஆவியின் கனிகள்தான். பரிசுத்த ஆவியாகிய நதி உங்களுக்குள்ளே பாய்கிறதினாலே ஆவியின் கனிகள் உங்களுக்குள் உண்டாகின்றன. அவை எத்தனை இனிமையான கனிகள்! அந்த ஒன்பது கனிகளையும் குறித்து கலா. 5:22-ல் வாசிக்கலாம்.
பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது, மகிழ்ச்சியுடனே கர்த்தருக்கு ஊழியம் செய்ய நீங்கள் புறப்பட்டுப் போகிறீர்கள். உங்களுக்காக பூமியிலே இறங்கி வந்து ஊழியம் செய்தவருக்காக நீங்களும் ஊழியம் செய்வது என்பது ஒரு பாக்கியமான அனுபவம் அல்லவா? சந்தோஷமான கடமை அல்லவா? அப். பவுல், “சந்தோஷத்துடனே உங்களிடத்தில் வந்து உங்களோடு இளைப்பாறும்படியாக” (ரோமர் 15:30) என்று எழுதுகிறார்.
யோவேல் தீர்க்கதரிசி, அந்த சந்தோஷத்தை சீயோன் குமாரருக்கு இவ்வாறாக அறிமுகம் செய்து வைக்கிறார். “சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப் பண்ணுவார்” (யோவேல் 2:23). ஆம், கர்த்தர் மழையை வருஷிக்கப் பண்ணுவார். மழை நீரானது குளத்தை நிரப்புகிறதுபோல பரிசுத்த ஆவியாகிய மழை உங்கள் உள்ளத்தை பொங்கி வழியச் செய்கிறது. உங்கள் உள்ளம் தெய்வீக மகிழ்ச்சியாலும், ஆனந்தத்தினாலும் நிரம்பி வழிகிறது.
பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட சீஷர்களை கர்த்தர் மகிழ்ச்சியினாலும் நிரப்பினார். வேதம் சொல்லுகிறது, “சீஷர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள்” (அப். 13:52). தேவபிள்ளைகளே, நீங்களும் அவ்விதமாய் நிரப்பப்படுவீர்களாக. பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது நிச்சயமாகவே உங்களுக்கு சந்தோஷமும், மனமகிழ்ச்சியும் உண்டு.
நினைவிற்கு:- “ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்” (சங். 46:4).