No products in the cart.
மே 8 – ஆவியின் பிரமாணம்!
“கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே” (ரோமர் 8:2).
உலகத்திலே விஞ்ஞான ரீதியான விதிமுறைகள் ஆயிரக்கணக்கில் இருப்பதை நாம் காண்கிறோம். இவற்றை அறிந்துகொள்ளுவதைவிட ஆவிக்குரிய விதிமுறைகளை நாம் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மேலே சொன்ன வசனத்திலே ஆவிக்குரிய மூன்று விதிமுறைகளை நாம் காண்கிறோம். ஒன்று பாவத்தின் விதிமுறை. அடுத்தது மரணத்தின் விதிமுறை. கடைசியாக, ஆவியின் விதிமுறை. இந்த மூன்று விதிமுறைகளும் ஆவிக்குரிய வகையில் நித்தியமாய் செயல்படக்கூடியவையாய் இருக்கின்றன.
முதலாவது, பாவத்தின் விதிமுறை என்ன? இச்சையானது கர்ப்பம் தரித்து பாவத்தைப் பிறப்பிக்கிறது. பாவம் செய்கிற ஆத்துமா சாகிறது. பாவத்தின் சம்பளம் மரணம் என்றாகிறது. பாவம் வாசற்படியிலே படுத்துக்கிடக்கிறது. ஒருவனுடைய எலும்புகள் அவனது வாலவயதின் பாவங்களினால் நிறைந்திருக்கின்றன.
இரண்டாவது, மரணத்தின் விதிமுறை என்ன? ஆத்தும மரணம் மனுஷருக்கும், தேவனுக்குமிடையிலே பிரிவினையை உண்டாக்குகிறது. இரண்டாம் மரணம் என்பது திரும்பி வரமுடியாத அக்கினியும், கந்தகமும் எரிகிற கடலுக்குள் தள்ளிவிடுகிறது. மரணத்தின் விதிமுறைகள் மிக பயங்கரமானவை.
அப். பவுல், பாவம் மற்றும் மரணம் ஆகிய விதிமுறைகளிலிருந்து தப்புவிக்கிற வேறு ஒரு விதிமுறையைக் குறிப்பிடுகிறார். அதுதான் ஆவியின் பிரமாணம். அந்த ஆவியின் பிரமாணத்தை, “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம்” என்று குறிப்பிடுகிறார். இது விடுதலையாக்குகிற பிரமாணம். உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் பிரமாணம்.
மூன்றாவது, ஆவியின் விதிமுறை என்ன? இது பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும், பிசாசிலிருந்தும், வியாதியிலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலையைத் தருகிறது. மேலும், நித்திய மரணத்திலிருந்தும் விடுதலைத் தருகிறது. இந்த ஆவியின் மரணத்தை அறியாதவர்கள்தான் பாவ பிரமாணத்தினாலும், மரண பிரமாணத்தினாலும் நெருக்கப்படுகிறார்கள். “ஐயோ, இந்த மரண சரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” என்று சொல்லி கதறுகிறார்கள். ஆனால் ஆவியின் பிரமாணத்தை அறிந்தவர்களோ, விடுதலையுடன் வாழுகிறார்கள்.
இயேசு இந்த பூமியில் இருந்தபோது, ஒரு நாள் பாவியாகிய ஒரு ஸ்திரீ அவரைத் தேடி வந்தாள். அவர் ஒரு பரிசேயன் வீட்டில் பந்தியிருக்கிறதை அறிந்து ஒரு பரணியிலே பரிமளதைலத்தைக் கொண்டுவந்து அவருடைய பாதத்தில் பூசினாள். இயேசு அவளைப் பார்த்து அன்போடு உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார் (லூக். 7:37,38,48). இயேசு சொன்ன அந்தஷணமே பாவப்பிரமாணத்திலிருந்து அந்த பெண்ணுக்கு விடுதலைக் கிடைத்ததாக வேதத்தில் வாசிக்கிறோம்.
தேவபிள்ளைகளே, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் மன்றாடி ஜெபியுங்கள். அவரே நம்மை பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணத்திலிருந்து தப்புவிக்க வல்லவர்.
நினைவிற்கு:- “ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீரப்பில்லை” (ரோமர் 8:1).