AppamAppam - Tamil

மே 7 – ஆவியினாலும், வல்லமையினாலும்!

“நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்” (அப். 10: 38).

இயேசுகிறிஸ்துவுக்கே பரிசுத்த ஆவியின் அபிஷேகமும், ஆவியின் நிறைவும் அத்தனை அவசியமாயிருந்ததென்றால், உங்கள் ஒவ்வொருவருக்கும் அந்த இரண்டும் எவ்வளவு அவசியம்! நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போதுதான் தேவனுடைய வல்லமையை அளவில்லாமல் பெறுகிறீர்கள்.

பிதாவாகிய தேவன், இயேசுவை பரிசுத்த ஆவியினாலே அபிஷேகம் பண்ணினார். கிறிஸ்து அந்த அபிஷேகத்தினால் நிறைந்து ஊழியம் செய்தார். நீங்கள் உங்களுடைய ஊழியத்திலும் வாழ்க்கையிலும் கிறிஸ்துவை வெளிப்படுத்த வேண்டுமென்றால், உங்களுக்கு பரிசுத்த ஆவி மிகவும் தேவை. சாட்சியுள்ள வாழ்க்கை வாழுவதற்கு பரிசுத்த ஆவியின் நிறைவு தேவை. பாதாளத்தின் வாசல்களை மேற்கொள்ளுவதற்கு ஆவியின் வரங்கள் தேவை.

அநேகர் பரிசுத்த ஆவியை பெறுகிறது என்றால், கைகளைத் தட்டுவதும், சரீரத்தை ஆட்டுவதும், அந்நியபாஷை பேசுவதும் மட்டுமே என்று நினைக்கிறார்கள். இவையெல்லாம் வெளிப்பிரகாரமான அடையாளங்களே. அடையாளங்களைப் பார்க்கிலும் மேலான ஒன்று உண்டு. அதுதான் உள்ளான மனுஷனை நிரப்புகிற தேவ வல்லமை. இயேசு கிறிஸ்துவை தேவன் ஆவியினால் நிரப்பியபோது, ஆவியோடுகூட வல்லமையும் இணைந்தே இருந்தது.

இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கையைப் பற்றி நாம் வேதத்தில் வாசிக்கும்போது அவர் எல்லா நேரங்களிலும் பரிசுத்த ஆவியைச் சார்ந்திருந்ததையே பார்க்கிறோம். ஊழியத்துக்குச் செல்லுமுன் அவர் தனிமையில் ஜெபித்ததாக வாசிக்கிறோம். அதைத் தொடர்ந்து பரிசுத்த ஆவியின் வல்லமையைக் கொண்டு அவர் பல அற்புதங்களைச் செய்ததையும் காண்கிறோம். நாம் பரிசுத்த ஆவியில் நிரம்பி ஜெபிக்கும்போது நமக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியின் பலமானது தூண்டப்படுவதைக் காண்கிறோம். அதன் வெளிப்பாட்டாலேயே நாம் நமது வாழ்வில் அதிசயங்களைக் காண முடிகிறது.

அநேகர் அந்நியபாஷை பேசியவுடனேயே திருப்தியடைந்து விடுகிறார்கள். மற்ற எல்லா கிறிஸ்தவர்களைப் பார்க்கிலும் தாங்கள் மேம்பட்ட கிறிஸ்தவர்கள் என்று பெருமை பாராட்டிக் கொள்ளுகிறார்கள். ஆனால், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியினுடைய வல்லமையின் முக்கியத்துவத்தை உணர்வதில்லை. பரிசுத்த ஆவியைப் பெற்ற பிறகும்கூட சிலர் செய்வினைகளுக்கும், பில்லி சூனியங்களுக்கும் பயந்து நடுங்குகிறார்கள். இவர்களிடம் பரிசுத்த ஆவி இருந்தும் அதில் வல்லமையில்லை. வெளிப்பிரகாரமான அடையாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால் உள்ளான மனுஷனில் பெலனில்லை.

தேவபிள்ளைகளே, பரிசுத்த ஆவியின் வல்லமையைக் கொண்டவர்களாய் நீங்கள் தேசத்தை அசைக்க வேண்டும், வியாதிகளை குணமாக்க வேண்டும், பெரிய அற்புதங்களைச் செய்ய வேண்டும்.

நினைவிற்கு: – “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்” (யோவான் 14:12).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.