AppamAppam - Tamil

மே 5 – ஆவியானவரின் சின்னங்கள்!

“…என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றவாளனை அவர் உங்களுக்குத் தந்தருள்வார்” (யோவான் 14:16).

இயேசுகிறிஸ்து ஒரு தேற்றரவாளன். அவர் பரிசுத்த ஆவியாகிய இன்னொரு தேற்றரவாளனை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அவர் என்றென்றைக்கும் உங்களோடுகூட இருக்கக்கூடியவர். ஆவியானவரைக் குறித்து பல சின்னங்கள் வேதத்தில் காணப்படுகிறது. அந்த சின்னங்களை நீங்கள் கருத்தோடு தியானிக்கும்போது, அது ஆவியானவரைக் குறித்து அதிகமாகவும், ஆழமாகவும் புரிந்து கொள்ளுவதற்கும், அவரோடு நெருங்கி உன்னதமான உறவு வைத்துக் கொள்ளுவதற்கும் உதவியாயிருக்கும்.

அப். பவுல், கிறிஸ்துவைக் குறித்து அதிகமாக அறிந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினார். கிறிஸ்துவைக் குறித்து அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன் என்றார் (பிலி. 3:8). அவருடைய வாழ்நாளின் ஒரே குறிக்கோள் கிறிஸ்துவைக் குறித்து அறிந்து கொள்ளுவதாகவேயிருந்தது.

திரித்துவத்திலே ஆவியானவர் அதிகமாய் அறியப்படாதவராய் விளங்குகிறவர். சிலர் அவரை திரித்துவத்திலே மறைந்து நிற்கும் நபராக எண்ணுகிறார்கள். அவர் தன்னைப்பற்றி பேசுவதற்கு தயங்குகிறபடியினாலும், எப்பொழுதும் பிதாவையும், குமாரனையும் மகிமைப்படுத்துவதினாலும் வேத பண்டிதர்கள் அவரை அவ்விதமாய் அழைக்கிறார்கள். அதேநேரம், வேதத்தை வாசித்து தியானித்தால் பரிசுத்த ஆவியானவரின் சின்னங்களின் மூலம் அவரது பெலனையும், வல்லமையையும், வரங்களையும், கனிகளையும், குணாதிசயங்களையும் அறிந்து கொள்ளலாம்.

உதாரணமாக, பிதாவாகிய தேவனை நினைக்கும்போது பெரிய கழுகு சின்னமும், இயேசு கிறிஸ்துவைக் குறித்து நினைக்கும்போது, ஆட்டுக்குட்டியின் சின்னமும் நம்முடைய மனக்கண்களுக்கு முன்பாக வருகிறது. அது போலவே ஆவியானவரைக் குறித்து சொல்லும்போது, அவர் புறாவைப் போன்றவர், அக்கினியைப் போன்றவர், பெருங்காற்றைப் போன்றவர், முத்திரையைப் போன்றவர், எண்ணெயைப் போன்றவர், அச்சாரத்தைப் போன்றவர் என்று பல வகையான சின்னங்களை வேதம் சொல்லுகிறது.

ஏன் அவருக்கு இத்தனை அதிகமான சின்னங்கள்? நீங்கள் அவரை புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். ஒரு வைரத்தைப் பாருங்கள்! அந்த வைரத்திற்கு பல முகப்புகளுண்டு. அதை வெவ்வேறு திசைகளில் திருப்பிப் பார்த்தால் வேறுவேறு விதமான பிரகாசத்தை அது கொடுக்கக்கூடும். ஒரு முகப்பு வைரமாகிவிடாது. எல்லாவற்றையும் சேர்த்து மொத்தமாக பார்க்கும்போதுதான் வைரத்தின் முழு அழகையும், மேன்மையையும், கண்டுகொள்ள முடியும்.

தேவபிள்ளைகளே, ஆவியானவரைக் குறித்து அறிந்து கொள்ளுகிறது மாத்திரமல்ல, அவரை தனிப்பட்ட முறையில் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். அவரது கரம் பிடித்து ஒவ்வொருநாளும் ஆழமான அனுபவத்திற்குள் கடந்து செல்லுங்கள்.

நினைவிற்கு:- “உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக் கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்” (யோவான் 14:17).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.