AppamAppam - Tamil

மே 3 – ஆவியினாலே ஆகும்!

“பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (சகரி. 4:6).

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல. ஆவியானவருடைய ஒத்தாசையும், துணையும் இருந்தால்தான் உங்களால் பரிசுத்த வாழ்க்கை வாழ முடியும். குமாரனாகிய இயேசு உலகத்திற்கு வந்து, இரத்தம் சிந்தி, பரிசுத்த வாழ்க்கை வாழ வழிமுறைகளை ஏற்படுத்தினார்.

பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் வந்து, வாசம்பண்ணி, உங்களை பரிசுத்த மாக்குகிறார். பரிசுத்த ஜீவியம் செய்வதும், சத்துருக்களை மேற்கொள்ளுவதும், பாவங்கள் நெருங்காதபடி, அசுத்தங்கள் மேற்கொள்ளாதபடி, தூய்மையாய் வாழுவதும் ஆவியினாலேயே ஆகும்.

அந்த ஆவியானவர் உங்களுக்குள்ளே வாசம் பண்ணுகிறார். நீங்கள் பரிசுத்தமாக ஜீவிக்க வேண்டும் என்பதற்காக அவர் உங்களைத் தனது வாசஸ்தலமாக்கிக்கொண்டார். வேதம் சொல்லுகிறது: “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்” (1 கொரி. 3:16,17).

பரிசுத்த ஆவியானவரை ஏன் தேவன் கொடுத்தார்? ஏன் பரிசுத்த ஆவியை தேவன் வைத்திருக்கிறார்? அந்நியபாஷை பேசுவதற்காக என்றும், வரங்களையும் வல்லமையையும் தருவதற்கு என்றும் சிலர் எண்ணக்கூடும். ஆனால் அவைகள் எல்லாவற்றைப் பார்க்கிலும் பரிசுத்த ஆவியை தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறதற்கு முக்கியமான காரணம் ஒன்றுண்டு. நீங்கள் பரிசுத்தமாய் ஜீவிக்க வேண்டுமென்பதே அந்த காரணமாகும்.

“புற ஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு” (ரோமர் 15:15) என்று வேதம் சொல்லுகிறது. ‘பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு’ என்ற பதத்தை ஆழமாய் சிந்தித்துப் பாருங்கள். பலியைப் பரிசுத்தமாக்குவதற்காகத்தான் கர்த்தர் அக்கினி அபிஷேகத்தை தந்தருளுகிறார்.

பரிசுத்த ஆவியின் அக்கினி உங்களுக்குள் வரும்போது பாவ சுபாவங்களையும் அசுத்தங்களையும் சுட்டெரிக்கிறது. மாம்சத்தில் கிரியை செய்கிற அசுத்த ஆவிகளின் கிரியைகளையும் சுட்டெரிக்கிறது. ஆம், பரிசுத்த ஆவியானவரை வேதம் அக்கினிக்கு ஒப்பிட்டு சொல்லுகிறதை காணலாம்.

வேதம் சொல்லுகிறது, “சீயோன் குமாரத்திகளின் அழுக்கைக் கழுவி, நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும், எருசலேமின் இரத்தப்பழிகளை அதின் நடுவிலிருந்து நீக்கிவிடுவார்” (ஏசா. 4:3).

தேவபிள்ளைகளே, எப்போதும் பரிசுத்த ஆவியினால் நிரம்பியிருங்கள். பரிசுத்த ஆவி உங்களிலே பொங்கி வழிந்துகொண்டேயிருக்கட்டும். அப்பொழுது தேவனுடைய அக்கினி உங்களை மதிலாய் நின்று காத்துக்கொள்ளும்.

நினைவிற்கு:- “நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு… எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” (2 தெச. 2:13).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.