AppamAppam - Tamil

மே 2 – ஆவியில் சம்பூரணம்!

“உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்” (எசேக். 36:26).

கர்த்தர், சகலவித நன்மைகளையும் உங்களுக்குச் சம்பூரணமாய் கொடுக்கிறவர். சரீரப்பிரகாரமான நன்மையானாலும் சரி, ஆத்துமாவுக்குரிய நன்மையானாலும் சரி, அல்லது ஆவிக்குரிய நன்மையானாலும் சரி, அவற்றை நிறைவாய் உங்களுக்குத் தந்தருளுவார். “உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிடுவேன்” என்று கர்த்தர் வாக்களிக்கிறார்.

புதிதான ஆவி உங்களுக்கு ஏன் தேவை? ஏனென்றால், தேவன் ஆவியாயிருக்கிறார். அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும், உண்மையோடும் அவரை தொழுது கொள்ளவேண்டும். உங்கள் ஆவிதான் தேவனுடைய ஆவியோடு இணைந்துகொள்ளுகிறது. மனுஷனுக்குள்ளே கர்த்தர் வைத்திருக்கிற ஆவியோடுகூட, ஆவியானவர் தொடர்பு கொள்ளுகிறார். அந்த ஆவியின் மூலமாகத்தான் பரலோக வெளிப்பாடுகளை உங்களுக்குக் கொடுக்கிறார். நீங்கள் தேவனிடத்திலிருந்து புதிதான ஆவியை பெற்றுக்கொள்ளாமல், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக்கொள்ள முடியாது.

ஒரு விஞ்ஞானி, கோழிகள் பேசும் பல்வேறு விதமான ஒலி சப்தங்களைக் குறித்து பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தார். கோழியானது 22 வகையான ஒலிக்குறிகளை எழுப்புகிறது என்பதைக் கண்டுபிடித்தார். உணவைக் கண்டுபிடிக்கும்போது கோழி இடுகிற ஒரு சத்தம், பருந்தை காணும்போது எச்சரிக்கிற வேறு ஒரு சத்தம், துணைப் பறவையை அழைக்கும்போது இடுகிற ஒரு சத்தம் என கோழியின் பல ஒலிகளை அவர் கண்டுபிடித்தார். மட்டுமல்ல, அந்த ஒலிகளை அவர் அடையாளம் கண்டபோது, அவரால் கோழிகளோடு பேசவும் முடிந்தது.

நீங்கள் பரலோக தேவனோடுகூட பேச வேண்டுமென்றால், அந்நிய பாஷை பேசுவது அவசியம். அதற்கு தேவ அனுக்கிரகம் உங்களுக்குத் தேவை. ஆகவேதான் கர்த்தர் உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, புதிதான ஆவியைக் கட்டளையிடுவேன் என்று சொல்லுகிறார்.

“நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்” (யோவேல் 2:28,29).

உங்களுக்குள்ளே கர்த்தருடைய ஆவி ஊற்றப்படும்போது, உள்ளத்திலிருக்கிற சோர்வின் ஆவிகள், பயத்தின் ஆவிகள், சஞ்சலத்தின் ஆவிகள், அவிசுவாசத்தின் ஆவிகள் ஆகிய அனைத்தும் வெளியேற்றப்படுகின்றன. எப்படி வெளிச்சம் வீசும்போது இருள் அகன்றுபோகிறதோ, அதுபோல சாத்தானின் ஆவிகள் அகன்றுபோகின்றன. தேவபிள்ளைகளே, அந்த மகிமையான ஆவியை பெற்றுக்கொண்டுவிட்டீர்களா?

நினைவிற்கு:- “கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு” (2 கொரி. 3:17).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.