AppamAppam - Tamil

ஏப்ரல் 30 – நீதிமான்களின் வேர்!

“துன்மார்க்கத்தினால் மனுஷன் நிலைவரப்படான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது” (நீதி. 12:3).

மரத்தைப் பாருங்கள்! அதிலே காணப்படுகிற பாகங்களுமுண்டு. காணப்படாத பாகங்களுமுண்டு. மரத்தில் இலைகளைக் காண்கிறீர்கள். கனிகள், பூக்களைப் பார்த்து மனமகிழ்ச்சியடைகிறீர்கள். கனிகளை உண்டு சந்தோஷப்படுகிறீர்கள். ஆனால் வெளியே காணப்படாத அதனுடைய வேர்களையோ, நீங்கள் எண்ணாமற் போய்விடுகிறீர்கள். வேர்தான் ஒரு மரத்திற்கு வேண்டிய எல்லா சத்துகளையும் கொண்டு வருகிறது. இலைகளுக்கு வேண்டிய தண்ணீரைக் கொடுக்கிறது. பழங்களுக்கு வேண்டிய ருசிகளைக் கொடுக்கிறது. வேர்களினால்தான் மரமே நிலை நிற்க முடிகிறது.

வேர்கள் மரத்திற்கு உணவைக் கொடுக்கிறது மட்டுமல்ல, பாதுகாப்பையும் உறுதியையும் கொடுக்கிறது. பெரிய புயல் வீசும்போது மரத்தின் கிளைகள் அங்கும் இங்கும் அசையும்போது, வேர்கள்தான் மரத்தை நிலைப்படுத்துகின்றன. வேர்கள் ஆழமாய் உறுதியாய் இல்லாமல் போனால், அந்த மரம் கீழே விழுந்துவிடும். நீதிமான்களுடைய வேரோ அசையாது என்று ஞானி கூறுகிறார் (நீதி. 12:3). நீதிமான்களுடைய வேராகிய உள்ளத்தின் ஆழம் பரிசுத்த ஆவியானவரோடு இணைந்திருக்கிறது. இதனாலேயே அது உறுதியாய் இருக்கிறது.

தேவபிள்ளைகளே, மரங்களைப் போலவே உங்களுடைய வாழ்க்கையிலும் ஜனங்கள் காணக்கூடிய பகுதியும் உண்டு. காணக்கூடாத அந்தரங்கப் பகுதியும் உண்டு. உங்கள் அந்தரங்க வாழ்க்கையிலே இயேசுவோடு தொடர்புகொண்டு ஆழமான ஜெப ஜீவியத்தில் ஈடுபட்டிருப்பீர்களானால், நீங்கள் ஒருநாளும் அசைக்கப்படுவதில்லை. துன்பம் என்னும் புயல்காற்று வீசினாலும் சரி, பிரச்சனை என்னும் சுழல்காற்று பயங்கரமாய் மோதினாலும் சரி, உங்கள் ஜெப ஜீவியம் உறுதியாயிருந்தால், ஆவிக்குரிய வாழ்க்கையில் அசையாதவர்களாயிருப்பீர்கள்.

ஜெபம் வாழ்க்கையில் குறைந்துபோனால் புயலினால் ஆங்காங்கே வேர் ஆழமாயிராததால் சரிந்து கிடக்கும் மரங்களுக்கு ஒப்பானவர்களாயிருப்பீர்கள். விழுந்து போன அநேக விசுவாசிகளுக்கும், விழுந்துபோன ஊழியர்களுக்கும் காரணம் அவர்களுடைய ஜெபக் குறைவுதான். ஒரு மரம் அதிகமான கனிகளையும், சுவையான கனிகளையும் கொடுக்குமானால் அதனுடைய இரகசியம் வேரில்தான் இருக்கிறது.

வேரைக் குறித்து வேதம் இன்னொரு ஆழமான இரகசியத்தையும் சுட்டிக் காண்பிக்கிறது. “வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமா யிருக்கும்” (ரோமர் 11:16). இதில் வேர் என்ற பகுதி மனிதனுடைய எண்ணங்கள், சிந்தனைகளைக் குறிக்கிறதாய் இருக்கிறது. சிந்தனை என்கிற வேரிலிருந்துதான் சொற்கள் நாவின் வழியாக வருகின்றன. உள்ளம் சிந்திக்கிறது. உதடுகள் பேசுகின்றன. சிந்தனை தூய்மையாயிருந்தால் சொற்கள் தூமையாய் இருக்கும். செயல்களும் தூய்மையாய் இருக்கும்.

தேவபிள்ளைகளே, உங்களுடைய சொற்களும், செயல்களும் பரிசுத்தமாய் விளங்கட்டும். நீங்களும் அநேக மக்களுக்கு ஆசீர்வாதமாய் மாறுவீர்கள்.

நினைவிற்கு:- “நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்” (சங். 52:8).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.