No products in the cart.
ஏப்ரல் 28 – நினைவில் கொள்ள வேண்டியவை!
“நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மீட்டுக்கொண்டதையும் நினைவுகூரக்கடவாய்” (உபா.15:15).
கர்த்தர் சிலவற்றை, மறந்துவிடக்கடவாய் என்றும், சிலவற்றை நினைவுகூரக்கடவாய் என்றும் சொல்லுகிறார். நீங்கள் கசப்பையும், வைராக்கியத்தையும் மறந்துவிட வேண்டும். பழைய பாவங்களையும், அக்கிரமங்களையும் மறந்துவிட வேண்டும். அதே நேரத்தில், கர்த்தருடைய அன்பையும், அவர் உங்களை மீட்டுக்கொண்டு அளித்த இரட்சிப்பையும் நினைவில் கொள்ள வேண்டும்.
“நினைவுகூருதல்” என்றால், மறக்காமல் இருக்க வேண்டும் என்பதையே குறிக்கிறது. ஒவ்வொரு வருடமும் நீங்கள் பிறந்தநாளை நினைவில் கொள்ளுகிறீர்கள். திருமண நாளை நினைவில் கொள்ளுகிறீர்கள். வருடந்தோறும் இயேசுவின் உயிர்த்தெழுதலை மறக்காமல் நினைத்து களிகூருகிறீர்கள். கிறிஸ்துவின் பிறந்தநாளின்போது, ஒருவருக்கொருவர் வாழ்த்து அட்டைகளை அனுப்புவதையும், பரிசுகளைக் கொடுப்பதையும், கிறிஸ்மஸ் கீதங்களை பாடுவதையும் நினைவிலே வைத்திருக்கிறீர்கள். நீங்கள் மறக்காமல் நினைவில் வைத்திருக்க வேண்டிய இன்னொரு காரியம உண்டு.
வேதம் சொல்லுகிறது, “நீ எகிப்து தேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மீட்டுக்கொண்டதையும் நினைவுகூரக்கடவாய்.” நினைவில் வைத்திருக்க வேண்டிய இரண்டு முக்கியமான காரியங்கள் இங்கே இருக்கின்றன. ஒன்று அடிமைத்தனத்தின் வேதனை, அடுத்தது, மீட்பின் சந்தோஷம். அடிமைத்தனத்தின் வேதனையை நினைவில் வைத்திருந்தால் மீண்டும் அடிமைத்தனத்திற்குள் செல்லாமல், மீட்பின் சந்தோஷத்தில் நிலைத்திருக்க அது உதவியாய் இருக்கும்.
இஸ்ரவேலர் ஏறக்குறைய நானூறு வருடங்கள் எகிப்திலே அடிமைகளாயிருந்தார்கள். அடிமைத்தன வாழ்வு என்பது, இழிவான ஒரு வாழ்வு. இந்த சூழ்நிலையிலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை மீட்கும்படி கர்த்தர் பஸ்காவை ஆசரிக்கும்படி சொன்னார். அதன்படி இஸ்ரவேல் ஜனங்கள் ஒவ்வொருவரும் பழுதற்ற ஆட்டுக்குட்டியைத் தங்களுக்கு தெரிந்துகொண்டு, அந்த ஆட்டுக்குட்டியை பலியாக்கி, அதன் இரத்தத்தை நிலைகால்களிலே தெளித்தார்கள் (யாத். 12:7-14). இரத்தம் தெளிக்கப்பட்டிருந்த அந்த வீட்டில் சங்காரதூதன் நுழையாமல், இரத்தம் இல்லாத எகிப்தியரின் வீடுகளுக்கு சென்று தலைப்பிள்ளையை அவன் சங்கரித்தான். அதன் மூலமாய் இஸ்ரவேலருக்கு விடுதலை உண்டாயிற்று.
புதிய ஏற்பாட்டிலே, இயேசுகிறிஸ்து நமக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாய் மாறினார். அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரித்ததுடன், பாவ வழக்கங்களின் அடிமைத்தனத்தைத் தகர்க்கவும் செய்தது. பிசாசின் தலையை நசுக்கினது.சாபத்தை முறித்தது.
தேவபிள்ளைகளே, இந்த அன்பையும், தியாகத்தையும் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம் அல்லவா?
நினைவிற்கு:- “ஆகையால், நீங்கள்… புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப் போடுங்கள். ஏனெனில், நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே” (1 கொரி. 5:7).