AppamAppam - Tamil

ஏப்ரல் 27 – நித்தியஜீவன் உண்டு!

“வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே” (யோவான் 5:39).

வேத வாக்கியங்களால் கிடைக்கப்பெறும் ஆசீர்வாதங்களில் ஒன்று நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளுவதாகும். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு வேதத்தை வாசித்து, தியானித்து அறிந்து கொள்ளுகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு ஜீவனிலே நீங்கள் பூரணப்பட்டிருப்பீர்கள். வேதத்திலுள்ள பரிசுத்தவான்களின் வாழ்க்கை வரலாறுகளை வாசித்துப் பாருங்கள். வேதத்தை மிகவும் நேசித்து கற்றுக்கொண்ட எஸ்றா, தானியேல், தீமோத்தேயு என்பவர்களெல்லாம் வேத அறிவிலே அதிக பூரணமுள்ளவர்களாய் இருந்தார்கள். அவர்கள் எத்தனையோ எதிர்ப்புகளின் மத்தியில் வாழ்ந்தபோதிலும் ஜெயங்கொண்டவர்களாகவே விளங்கினார்கள்.

வேத வசனங்கள் உங்கள் இருதயத்தில் தங்கி இருக்குமென்றால், பாவங்களை நீங்கள் இலகுவாக மேற்கொள்ளுவீர்கள். தாவீது சொல்லுகிறார், “நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்” (சங். 119:11). “அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு” (சங். 19:11). வேதத்துக்கு செவிக்கொடுக்காமல் வேதத்தை புறக்கணிக்கிறவர்களின் நிலைமை என்னவாகும்? இயேசு சொன்னார்: “என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசி நாளில் நியாயந்தீர்க்கும்” (யோவான் 12:48).

நெருப்பு ஒன்றுதான். மெழுகு அதன் அருகில் வந்தால் உருகுகிறது. தண்ணீர் ஆவியாகிறது. ஆனால் களிமண்ணோ கடினப்படுகிறது. விதை ஒன்றுதான். நல்ல நிலத்தில் விழுந்தால் நூறு மடங்கு பலன் தருகிறது. கற்பாறையில் விழுந்தால் தீந்து போகிறது. முட்களில் விழுந்தால் நெருக்கிப் போடுகிறது. அதைப்போலவே வேதம் ஒன்றுதான். ஆனால் அது சிலருடைய இருதயத்தை களிகூரப்பண்ணுகிறது. சிலருடைய இருதயத்தை கடினப்படுத்துகிறது.

இயேசு வசனத்தை பிரசங்கித்தார். சிலர் ஆவலோடு அவரைப் பின்பற்றினார்கள். சிலர் அவர் செய்த அற்புதங்களைக் கண்டு தேவனைத் துதித்து மகிமைப்படுத்தினார்கள். ஆனால் வேறு சிலரோ இயேசுவைப் புறக்கணித்து, அவரைக் கொலை செய்ய வகை தேடினார்கள். கிறிஸ்துவின் வசனம் ஒன்றுதான். அது உங்களிடத்தில் கடந்து வரும்போது நீங்கள் எவ்விதமாய் எதிர்நோக்குகிறீர்கள்? அதை ஆவலோடு ஏற்றுக் கொள்கிறீர்களா? அல்லது விதண்டாவாதம் செய்து அலட்சியம் செய்கிறீர்களா?

அப். யோவான் எழுதுகிறார், “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது” (யோவான் 20:31). தேவபிள்ளைகளே, வேத வசனத்தினால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு.

நினைவிற்கு:- “உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவ குமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவ குமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்” (1 யோவான் 5:13).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.