AppamAppam - Tamil

ஏப்ரல் 26 – நிறைவான சந்தோஷம்!

“கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்வீர்கள்” (யோவான் 16:24).

கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் மிகவும் உண்மையானவை. நீங்கள் கேட்கும்போது அவர் நிறைவான சந்தோஷத்தைத் தருவேன் என்று வாக்களிக்கிறார். கர்த்தரிடம் எப்படிக் கேட்பது? யாக்கோபு போராடிக் கேட்டார். நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்று உறுதியாய் கேட்டார். அவ்விதமாய் வாக்குத்தத்தங்களைப் பெற்றுக்கொள்ள நீங்களும் கர்த்தரிடத்தில் போராடி ஜெபிப்பீர்களா?

அன்று ஆயக்காரன் தன்னைத் தாழ்த்தி கண்ணீரோடு ‘பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்’ என்று கேட்டான். அவன் கேட்டபடியே கர்த்தர் கிருபைகூர்ந்தது மாத்திரமல்ல, அவனை நீதிமானாக்கி அனுப்பினார். கானானிய ஸ்திரீ தன்னுடைய மகளுடைய சுகத்திற்காகக் கேட்டபோது, எத்தனை மனதுருகி கேட்டாள்! ‘ஆண்டவரே, மேஜையின் மேலிருந்து விழும் துணிக்கையை நாய்க்குட்டிகள் தின்னுமே’ என்றாள். கர்த்தர் அந்த விசுவாசத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அப்படியே கானானிய ஸ்திரீயின் மகளை குணமாக்கினார்.

அன்றைக்கு கெட்டக்குமாரன் கேட்டான். ‘தகப்பனே, பரத்திற்கு விரோதமாகவும், உமக்கு விரோதமாகவும் பாவம் செய்தேன். இனி உம்முடைய குமாரன் என்று அழைக்கப்படுவதற்கு நான் பாத்திரவான் அல்ல. உம்முடைய வேலைக்காரனில் ஒருவனைப் போலாகிலும் என்னை வைத்துக் கொள்ளும்’ என்றான். அந்த வார்த்தைகள் தகப்பனை மனதுருகப் பண்ணிற்று. இயேசு சொன்னார், “கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்” (யோவான் 16:24). “என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்” (யோவான் 14:14).

ஒரு முறை வேதநாயக சாஸ்திரியார் ஊழியத்திற்கு போய்விட்டு களைப்போடு வீட்டுக்குத் திரும்பினார். வீட்டில் உணவு ஒன்றுமேயில்லை. மனைவியும், பிள்ளைகளும் பட்டினியாய் உட்கார்ந்திருந்தார்கள். வேதநாயக சாஸ்திரியார் அவர்களோடு உட்கார்ந்து, “தேவா இரக்கமில்லையோ, இயேசு தேவா இரக்கமில்லையோ? எல்லாமறிந்த பொருளே என் இல்லாமை நீக்கும் அருளே, கொடும் பொல்லா மனதையுடைய கல்லான பாவிகளை, கொல்லாதருள் புரியும் நல்லாயன் இயேசு தேவா,தேவா இரக்கமில்லையோ?” என்ற பாடலை நெஞ்சுருகிப் பாடினார்.

அந்தப் பாடலை கர்த்தர் கவனமாய் கேட்டார். கொஞ்ச நேரத்திற்குள் அவருடைய வீட்டின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. யாரென்று பார்த்தால், தஞ்சாவூர் ராஜா தன் அரண்மனையிலிருந்து ஏராளமான உணவுப் பொருட்களை இந்த கவிராயருக்கு கொடுத்து அனுப்பியிருந்தார். ‘வீட்டுக்கு விருந்துக்கு வருவேன் என்று சொன்ன விருந்தினர்கள் வரவில்லை. ஆகவே இந்த விருந்தை உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன்’ என்று ராஜா தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். தேவபிள்ளைகளே, உங்கள் தேவை எதுவாயிருந்தாலும் ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவுமானவர் உங்களுக்கு அதை அருளிச் செய்வார்.

நினைவிற்கு:- “என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்” (எரே. 33:3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.