AppamAppam - Tamil

ஏப்ரல் 24 – நிரம்பி வழியட்டும்!

“அந்தப் பாத்திரங்கள் நிறைந்த பின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள்” (2 இராஜா. 4:6).

நம் தேவன் அற்புதங்களைச் செய்கிறவர். அற்புதங்கள் என்றால் என்ன? மனுஷன் தன்னுடைய நம்பிக்கை எல்லாவற்றையும் இழந்து போகும்போது, தேவனாகிய கர்த்தர் நடப்பிக்கும் அதிசயமான காரியங்களின் பெயர்தான் அற்புதங்கள்.

கடன் தொல்லையில் சிக்கித் தவித்த ஒரு ஏழை விதவையின் வாழ்க்கையில், கர்த்தர் எவ்விதமாய் அற்புதத்தைச் செய்தார் என்பதைதான், மேலே உள்ள வசனம் நமக்கு விவரிக்கிறது. அவள் போய் தன்னுடைய அயல் வீட்டுக்காரர்கள் எல்லாரிடமும் அநேக வெறும் பாத்திரங்களைக் கேட்டு வாங்கி, வீட்டிற்குள்ளே போய் தன்னிடமிருந்த எண்ணெயை அதில் ஊற்றினாள். ஊற்ற, ஊற்ற பாத்திரங்கள் நிரம்பிக் கொண்டேயிருந்தது. பாத்திரத்தில் எண்ணெயும் குறைந்து போகாமல் இருந்தது.

இந்த ஏழை விதவையின் வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டபோது, கடனைத் தீர்க்க மனிதனிடம் போகவில்லை. கர்த்தரிடம் வந்தாள். கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் வந்தாள். ஒருவேளை நீங்களும்கூட கடன் தொல்லையில் நெருக்கப்பட்டிருக்கலாம். வியாதியினால் நெருக்கப்பட்டிருக்கலாம். வேறு பிரச்சனைகளினாலும் பாதிக்கப்பட்டிருக்கலாம். பயப்படாதிருங்கள், கலங்காதிருங்கள். பரம எலிசாவான இயேசுகிறிஸ்துவினிடத்தில் வாருங்கள். உங்களுடைய பிரச்சனை எதுவாயிருந்தாலும் அதிலிருந்து கர்த்தர் உங்களை விடுவிப்பார். உங்களுடைய பிள்ளைகளின் பிரச்சனைகளையும் நீக்கியருளுவார். “குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவான் 8:36) என்று வேதம் சொல்லுகிறது.

அன்றைக்கு அந்த விதவையைப் பார்த்து எலிசா ஒரு கேள்வி கேட்டார். “உன்னிடத்தில் என்ன இருக்கிறது?” என்பதே அந்த கேள்வி. அவளிடம் பொன்னோ, பொருளோ இல்லை. ஆனால் ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய் இருந்தது. எண்ணெயினால் வரும் ஆசீர்வாதங்கள் எண்ணற்றவை. எண்ணெ பூசி ஜெபிக்கும்போது வியாதிகள் குணமாகின்றன. எண்ணெயினால் காயங்கட்டுகிறார்கள். எண்ணெயினால் ராஜாக்களை, தீர்க்கதரிசிகளை, ஆசாரியர்களை அபிஷேகம் பண்ணுகிறார்கள். எண்ணெ பரிசுத்த ஆவியானவருக்கு அடையாளம்.

தேவபிள்ளைகளே, அந்த ஏழை விதவை, தன்னிடமிருந்த எண்ணெயை ஆயிரக்கணக்கான பாத்திரங்களில் வார்த்த போதிலும் அந்த எண்ணெய் குறைவுபடவேயில்லை. கர்த்தர் உங்களுக்குள்ளே கொடுத்திருக்கிற அபிஷேக எண்ணெயை இந்திய தேசத்திலுள்ள அத்தனை மக்கள் மேல் ஊற்றினாலும் உங்கள் அபிஷேகம் குறைந்து போவதேயில்லை. உங்கள் பாத்திரங்களிலிருந்து தாகமுள்ள பாத்திரங்களுக்கு ஊற்றிக்கொடுத்துக்கொண்டே இருங்கள். அற்புதத்தைச் செய்கிற கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் அற்புதத்தை செய்வார். நம் தேவன் பெருகச் செய்கிற தேவன். எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் மற்றவர்களுக்குக் கொடுக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

நினைவிற்கு:- “என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது” (சங். 23:5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.