AppamAppam - Tamil

ஏப்ரல் 23 – நீங்களும்!

“கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன்” (லேவி. 20:26).

பழைய ஏற்பாட்டிலே, தேவன் தம்முடைய ஜனங்களின் பரிசுத்த வாழ்க்கையை விரும்பி அசுத்தமான பறவைகளையும், ஜந்துக்களையும் புசிக்கக் கூடாது என்றும், மரித்த பிரேதத்தை தொடக்கூடாது என்றும் கட்டளையிட்டார். குஷ்டரோகிகளோடு எந்த உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று எச்சரித்தார். மட்டுமல்ல, இஸ்ரவேல் ஜனங்கள் பரிசுத்தத்திற்கென்று வேறுபிரிக்கப்பட்டவர்களாக ஜீவிக்கும்படி விருத்தசேதன முறைகளைக் கொண்டு வந்தார். அவர்கள் பாவங்களை விட்டு பரிசுத்தமடைவதற்காக பாவ நிவாரண பலி, குற்ற நிவாரண பலி, தகனபலி என்ற பலிகளையெல்லாம் ஏற்படுத்தினார்.

புதிய ஏற்பாட்டிற்கு வரும்போது, உங்களுடைய பரிசுத்த வாழ்க்கையின் மேல் அக்கறைக்கொண்ட கர்த்தர், தம்மையே பலியாக அர்ப்பணித்தார். கல்வாரியிலே தம்முடைய இரத்தத்தையெல்லாம் சிந்தினார். உங்களைக் கழுவி நீதிமான்களாக்க, தன்னைப் பிழிந்து, நொறுக்கப்பட ஒப்புக்கொடுத்தார். உங்களை சுத்திகரித்து தம்மண்டை இழுத்துக்கொள்ளுவதற்காக தம் மாம்சத்தையெல்லாம் கிழிக்க ஒப்புக்கொடுத்து, பாடுகளைச் சகித்தார்.

உளையான சேற்றிலிருந்து கர்த்தர் உங்களை தூக்கியெடுத்தார். சேறும், சகதியுமான பாவங்கள் உங்கள் ஆத்துமாவிலே ஒட்டிக்கொண்டிருந்தன. கழுவுவதற்காக கல்வாரி மலையிலுள்ள கொல்கொதா மேட்டிற்கு உங்களை அழைத்துச் சென்று, தம்முடைய இரத்தத்தை உங்கள்மேல் ஊற்றி, உங்களைப் பாவங்களறக் கழுவினார். வேதம் சொல்லுகிறது, “இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்” (1 யோவான் 1:7).

நீங்கள் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்படும்போது, நீதிமான்களாக்கப்படுகிறீர்கள். அப். பவுல், தன் நிருபங்களில், ‘பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுக்கு’ என்று குறிப்பிடுகிறார் (ரோம. 1:2; 1 கொரி. 1:2). நீங்கள் பரிசுத்தவான்களாக்கப்பட அழைக்கப்பட்டவர்கள் என்ற உணர்வு எப்போதும் இருக்கட்டும். தன் இரத்தத்தினால் அவர் உங்களை பரிசுத்தமாக்கியிருக்கிறார் என்ற விசுவாசம் இருக்கட்டும். தூய்மையான வாழ்க்கை வாழ ஆவியானவர் பெலன் தருவார் என்ற நம்பிக்கையும் இருக்கட்டும்.

வேதம் சொல்லுகிறது, “நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள். அதற்கு இயேசுகிறிஸ்துதாமே மூலைக் கல்லாயிருக்கிறார்” (எபே. 2:19,20). நீங்கள் கர்த்தரோடும், அப்போஸ்தலர்களோடும், தீர்க்கதரிசிகளோடும், பரிசுத்தவான்களோடும் இணைந்து ஒரே மாளிகையாக கட்டப்பட்டவர்களாயிருக்கும்போது, நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாய் விளங்குவீர்கள். தேவபிள்ளைகளே, உங்கள் வாழ்க்கை மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்கட்டும்.

நினைவிற்கு:- “பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பெயர்முதலா உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது” (எபே. 5:3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.