AppamAppam - Tamil

ஏப்ரல் 22 – நீங்கள் யார்?

“ஜீவனுள்ள கற்களைப் போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசு கிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக் கூட்டமாகவும் கட்டப்பட்டு வருகிறீர்கள்” (1 பேதுரு 2:5).

நீங்கள் யார், என்பதை அப்போஸ்தலனாகிய பேதுரு இவ்வாறு விளக்குகிறார். ‘நீங்கள் பரிசுத்த ஆசாரியர் கூட்டம்’ என்று குறிப்பிடுகிறார். அதே அதிகாரத்தின் 9-ம் வசனத்திலே, நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி என்றும், பரிசுத்த ஜாதி என்றும், தேவனுக்கு சொந்தமான ஜனம் என்றும் குறிப்பிடுகிறார். கர்த்தருடைய பிள்ளைகள், தாங்கள் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தங்களை வேதம் யார் என்று குறிப்பிடுகிறது என்பதையும், கர்த்தர் தங்களைக் காணும்போது யாராக காண்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ளும்போது நீங்கள் தலை நிமிர்ந்து உற்சாகமாய் நடக்க முடியும்.

நீங்கள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். தேவ சாயலையும் ரூபத்தையும் தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். உங்களுக்காக இரத்தம் சிந்தி உங்களை மீட்டெடுத்திருக்கிறார். அவருடைய சொந்த பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிற பெரிய உரிமையைத் தந்திருக்கிறார். நீங்கள் இயேசுவோடுகூட என்றென்றும் அரசாளும்படி அழைக்கப்பட்டவர்கள். கர்த்தர் இவ்வளவு மேன்மையாய் உங்களைக் கண்டிருக்க, நீங்கள் தாழ்வுமனப்பான்மைக்கு இடம் கொடுத்து ஒருபோதும் சோர்ந்து போய்விடக்கூடாது. நீங்கள் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

கர்த்தர் மோசேயை மேன்மையாய்க் கண்டார். மோசேயைக் கொண்டுதான் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலரை விடுவிக்கச் சித்தமானார். மோசேயைக் கொண்டுதான் இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திச் செல்ல தீர்மானித்தார். ஆனால் அந்த மோசேக்கு தான் யார் என்பது தெரியவில்லை. “நான் வாக்கு வல்லமையுள்ளவன் அல்ல, நான் திக்குவாயனும், மந்த நாவும் உள்ளவன்” என்று தன்னைக் குறித்து தாழ்வு மனப்பான்மையுடன் பேசிக் கொண்டிருந்தார். தன்னை அழைக்கிற தேவனுடைய மகிமையும் மகத்துவமும் என்னவென்று அவருக்கு புரியவில்லை. கர்த்தர் மோசேயைப் பார்த்து, “நீ போ நான் உன் வாயோடு இருந்து நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன்” என்றார்.

அதைப்போலவே கர்த்தர் இஸ்ரவேலின் நியாயாதிபதியாக கிதியோனை அழைத்தபோது, கிதியோனும் தான் யார், கர்த்தர் தன்னை எவ்வளவு மேன்மையாய்க் காண்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. ‘இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன்’ என்று தாழ்வு மனப்பான்மையோடு கூறுகிறதை கவனியுங்கள் (நியா. 6:15). சாத்தான் கொண்டு வருகிற பெரிய தந்திரம் என்னவென்றால், தேவனுடைய ஜனங்களை தங்களைத் தாங்களே தாழ்வாக மதிப்பிடுவது செய்யச் செய்வதுதான். இதனால் அவர்கள் எழுந்து கர்த்தருக்காக பெரிய காரியங்களைச் செய்ய முடியாமல் போய் விடுகிறது.

தேவபிள்ளைகளே, நீங்கள் யார் என்பதையும், தேவன் யார் என்பதையும் நீங்கள் சரியாய்ப் புரிந்து கொள்ள வேண்டும். தேவன் பேதைகளை ஞானிகளாக்குகிறவர் அல்லவா?

நினைவிற்கு:- “இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்கள் பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை” (ஏசா. 64:8).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.