AppamAppam - Tamil

ஏப்ரல் 21 – அன்பே பெரியது!

“இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது” (1 கொரி.13:13).

நிலைத்திருக்கிறதில் நிலைத்திருக்க வேண்டியது உங்களுடைய கடமை. விசுவாசம், நம்பிக்கை, அன்பு என்பவைகள் ஒரு விசுவாசியினுடைய உள்ளத்திலே எப்பொழுதும் நிலைத்திருக்க வேண்டும்.

விசுவாசம் என்றால் என்ன? “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” (எபி. 11:1). இந்த விசுவாசம் கர்த்தரில்தான் ஆரம்பித்தது. அவர் விசுவாசத்தினாலே உலகத்தை யெல்லாம் உருவாக்கினார் (எபி.11:3). மாத்திரமல்ல, அவர்தான் உங்களிலே விசுவாசத்தை ஆரம்பிக்கின்றார். அவரே உங்களுடைய விசுவாசத்தை முடியச் செய்ய வல்லமையுள்ளவராயிருக்கிறார் (எபி. 12:1). முடியச் செய்வது என்று சொல்லுவது சம்பூரணத்தைக் குறிக்கிறது.

ஒரு விசுவாசி விசுவாசத்தில் எவ்வளவு வளர்ந்திருக்கிறானோ, அவ்வளவுக்கவ்வளவு இயேசுவை நெருங்கி ஜீவிப்பான். அவனைச் சூழ தெய்வீக சாட்சி நிரம்பியிருக்கும். தேவன் உங்களில் துவக்கிய விசுவாசம்தான் உங்களை மகா பரிசுத்த ஸ்தலம் வரைக்கும் கொண்டு போக முடியும். பரலோகத்திலே பிரவேசிக்க விசுவாசம் எவ்வளவு அவசியம்!

விசுவாசம் மட்டும் உங்களுக்கிருந்தால் போதாது. நம்பிக்கையும் தேவை. கர்த்தர் இயற்கையாகவே உங்கள் உள்ளத்தில் ஓரளவு நம்பிக்கை வைத்திருக்கிறார். தண்ணீரைக் குடிக்கப் போகும்போது அது நல்ல தண்ணீர்தான் என்று நம்புகிறீர்கள். பஸ்ஸில் பயணம் செய்யும்போது அந்த டிரைவர் பாதுகாப்பாக கொண்டு செல்லக்கூடியவர் என்று நம்புகிறீர்கள். சவரம் பண்ண கடைக்குச் செல்லும்போது, அவன் ஆபத்தில்லாமல் செய்வான் என்று நம்புகிறீர்கள். அதே நேரத்தில் ஒரு விசுவாசியின் நம்பிக்கை என்ன? அந்த நம்பிக்கையை அப். பவுல், “தேவ மகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மை பாராட்டுகிறோம்” (ரோமர் 5:2) என்று எழுதுகிறார்.

வேதம் சொல்லுகிறது, “நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடி வந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார். அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது” (எபி. 6:18,19).

உங்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கையுண்டு. அது இயேசு கிறிஸ்துவை சந்திப்போம் என்பதே. நித்தியத்தைக் குறித்த நம்பிக்கை. பரலோகராஜ்யத்தில் அவரோடுகூட என்றென்றும் வாழுவோம் என்கிற நம்பிக்கை. விசுவாசமும் நம்பிக்கையும் மாத்திரம் போதாது. அன்பும் அவசியம் (1 கொரி. 13:13).

கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பெலத்தோடும் அன்புகூர வேண்டுமென்பதே அவருடைய முதல் கட்டளையாயிருக்கிறது. தேவபிள்ளைகளே, உங்களிலே தெய்வீக அன்பு எப்பொழுதும் நிறைவாய் காணப்படட்டும்.

நினைவிற்கு:- “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது… அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது” (1 கொரி. 13:4).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.