AppamAppam - Tamil

ஏப்ரல் 20 – நீரூற்றண்டையில்!

“அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனி தரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்” (ஆதி. 49:22).

யாக்கோபின் குமாரர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்களுக்குள் யோசேப்பின் ஆசீர்வாதங்கள் மிக அருமையானவை, இனிமையானவை. யோசேப்பை அவ்வளவாய் ஆசீர்வதித்த கர்த்தர், உங்களையும் அவ்வாறே ஆசீர்வதிப்பார். அவர் பட்சபாதமுள்ளவரல்ல.

யோசேப்பைப் பாருங்கள்! அவன் நீரூற்றண்டையிலுள்ள கனிதரும் செடி என்று வேதம் சொல்லுகிறது. வறட்சியான இடத்தில் நாட்டப்பட்டிருக்கும் செடியால் கனிகொடுக்க இயலாது. தேவபிள்ளைகளே, நீங்கள் எங்கே நாட்டப்பட்டிருக்கிறீர்கள்? நீரூற்றண்டையில் நாட்டப்பட்டிருப்பீர்களென்றால், கர்த்தருக்காக மிகுதியான கனிகளைக் கொடுப்பீர்கள்.

நீரூற்று எதைக் குறிக்கிறது? அது ஆவியானவரைக் குறிக்கிறது. எந்த மனுஷன் ஆவியானவரோடுகூட ஆழமான தொடர்பு வைத்திருக்கிறானோ, அவன் கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருப்பான். செழிப்பாக வாழ்ந்துகொண்டேயிருப்பான். வல்லமையும் வரமும் நிரம்பியவனாயிருப்பான். இது எத்தனை மேன்மையான பாக்கியம்!

சாதாரணமாக, நீங்கள் ஏராளமான கனிகளால் நிரம்பியிருக்கும் ஒரு மரத்தைப் பார்த்தால் சந்தோஷப்படுகிறீர்கள். எவ்வளவு ருசிகரமான பழங்கள், எவ்வளவு அழகாய் பழுத்திருக்கிறது என்று மெச்சிக்கொள்ளுகிறீர்கள். ஆனால் அந்த கனி நன்றாயிருப்பதன் இரகசியம் என்ன? அந்த மரத்தின் வேர்கள், நீரூற்றோடு இடைவிடாமல் தொடர்பு கொண்டிருப்பதிலேயே இருக்கிறது. அதுபோல கனி தருகிற விசுவாசிகளையும் ஊழியர்களையும் பார்க்கும்போது, இவர்கள் எப்படி ஆவியின் வரங்களினால், வல்லமையினால் இவ்வளவாய் நிரம்பியிருக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுவீர்கள். அதனுடைய இரகசியம் என்ன? வேரைப் போன்ற அவர்களுடைய உள்ளமானது தேவ ஆவியானவரோடு ஆழமாய் தொடர்பு கொண்டிருப்பதுதான். அவர்கள் கர்த்தரோடு சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விளக்கு பிரகாசமாய் எரிவதை நீங்கள் பார்க்கிறீர்கள். அந்த வெளிச்சத்தில் களிகூருகிறீர்கள். ஆனால் அந்த விளக்கு வெளிச்சத்தின் இரகசியம் என்னவென்றால், அதனுடைய திரி எண்ணெயோடு இடைவிடாத தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறதுதான். உங்கள் வாழ்க்கை பிரகாசிக்க வேண்டுமென்றால், உங்களுடைய உள்ளமாகிய திரி ஆவியானவருக்குள் இணைந்திருக்க வேண்டும்.

வானளாவ நிற்கும் கட்டிடங்களைக் கண்டு நீங்கள் சந்தோஷப்படுகிறீர்கள். அவற்றின் உறுதி எங்கே இருக்கிறது? கன்மலையின்மேல் போடப்பட்டிருக்கிற அஸ்திபாரத்திலேயே அந்த உறுதி இருக்கிறது. யார் யாருடைய உள்ளம் கன்மலையாகிய கிறிஸ்துவோடுகூட ஆழமாய் தொடர்பு கொண்டிருக்கிறதோ, அவர்கள் மழையையும், புயலையும், வெள்ளத்தையும் கண்டு தள்ளாடாமல், உறுதியான கட்டிடம் போல் நிற்பார்கள்.

தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களை நீர்க்கால்களின் ஓரமாய் நட்டிருக்கிறார் (சங். 1:3). நீங்கள் கர்த்தருக்காக கனி கொடுக்க வேண்டும்.

நினைவிற்கு:- “அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்” (வெளி. 22:2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.